Published : 28 Oct 2025 09:13 AM
Last Updated : 28 Oct 2025 09:13 AM
பெங்களூரு: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - நாகாலாந்து அணிகள் இடையிலான ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 115 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து விளையாடிய நாகாலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 58 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. தேகா நிஸ்சல் 80, யுகந்தர் சிங் 58 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். யுகந்தர் சிங் 67 ரன்கள் எடுத்த நிலையில் சந்திரசேகர் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இம்லிவதி லெம்தூர் களமிறங்கினார்.
நாகாலாந்து அணி 127 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 365 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் 3-வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
தேகா நிஸ்சல் 161 ரன்களும் இம்லிவதி லெம்தூர் 115 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 147 ரன்கள் பின்தங்கியுள்ள நாகாலாந்து அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT