Published : 27 Oct 2025 12:22 PM
Last Updated : 27 Oct 2025 12:22 PM
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கமின்ஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகியுள்ளார். இதனையடுத்து ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மெக்டோனால்டு 2-வது டெஸ்ட்டிலும் பாட் கமின்ஸ் ஆடுவது உத்தரவாதமில்லை என்று அறிவித்திருப்பதால் ஆஸ்திரேலிய அணித்தேர்வில் பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
ஆனால் பாட் கமின்ஸ் ஆஸ்திரேலிய அணியுடன் பெர்த் சென்று, அவர்களுடன் வலைப்பயிற்சியில் ஈடுபடவுள்ளார். ஆனால் வலையில் ஆட முடியும் போது ஏன் முதல் டெஸ்ட்டை ஆட முடியவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
ஆல்ரவுண்டர்கள் பியூ வெப்ஸ்டர் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர்களின் உடல் தகுதியை இந்த வார ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டியை வைத்தே தீர்மானிக்க முடியும். கேமரூன் கிரீன் பவுலிங் வீச தொடங்கி விட்டாலும் அவர் இந்த வார உள்நாட்டுப் போட்டியில் ஆடிய பிறகே அவரது தேர்வு உறுதியாகும்.
மிட்செல் மார்ஷ் டெஸ்ட் போட்டிகளில் பியூ வெப்ஸ்டரிடம் தன் இடத்தை இழந்தவர். ஆனால் இந்த ஆஷஸ் தொடருக்கு அவரை மீண்டும் அணியில் சேர்க்க பரிசீலிக்கப்படலாம் என்று மெக்டோனல்டு சுட்டியிருக்கிறார். நவம்பர் இறுதி மற்றும் டிசம்பரில் ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகள் மூன்று இருக்கிறது மார்ஷ் அதிலும் ஆடி நிரூபிக்க வேண்டியுள்ளது.
மேலும் இன்னொரு பெரிய சிக்கல் என்னவெனில் உஸ்மான் கவாஜாவுடன் ஓப்பனிங் இறங்கப் போவது யார்? அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் மெக்டோனால்டு. ஷெஃபீல்ட் ஷீல்ட் போட்டிகளை வைத்துத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார். அநேகமாக மார்னஸ் லபுஷேன் தன் பார்முக்கு மீண்டும் அபாரமாகத் திரும்பியிருப்பதால் அவர் தான் தொடக்க வீரராகக் களமிறங்குவார் என்று பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. சாம் கோன்ஸ்டாஸ் மற்றும் ஜாக் வெதரால்ட் என்ற தொடக்க வீரரும் பரிசீலிக்கப்பட்டு வருகிறார்.
கமின்ஸுக்குப் பதிலாக நிச்சயம் பூர்வக்குடி வீரர் ஸ்காட் போலண்ட் முதல் டெஸ்ட்டில் ஆடுவது இப்போதைக்கு உறுதியாகியுள்ளது. மைக்கேல் நீசர், இந்தியாவுக்கு எதிராக 2-வது ஒருநாள் போட்டியில் அசத்தலாக வீசிய பார்ட்லெட்டும் பரிசீலனையில் இருக்கிறார். ஏற்கெனவே, ஜாஷ் ஹாசில்வுட் எந்த ஒரு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் முழுமையாக ஆடாதவர். காயத்துக்கு ஆட்படக்கூடியவர். நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியிலும் கூட அவர் பாதியிலேயே காயம் காரணமாக விலக நேரிட்டது. எனவே பாட் கமின்ஸுடன் காயத்தின் கவலைகள் சூழ ஆஸ்திரேலியா அணி பவர் ஹவுஸ் இங்கிலாந்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT