Published : 27 Oct 2025 10:47 AM
Last Updated : 27 Oct 2025 10:47 AM
திமாப்பூர்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகாலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் அபாரமாக விளையாடி இரட்டைச் சதம் விளாசினார்.
‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக, நாகாலாந்து அணிகள் மோதிய லீக் ஆட்டம் நேற்று முன்தினம் திமாப்பூரிலுள்ள நாகாலாந்து கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. முதலில் விளையாடிய தமிழக அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்திருந்தது. விமல் குமார் 189 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தை பிரதோஷ் ரஞ்சன் பால் 156 ரன்களுடனும், ஆந்த்ரே சித்தார்த் 30 ரன்களுடனும் தொடங்கினர். ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்ந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டைச் சதம் விளாசினார். அவர் 314 பந்துகளில் 201 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திரஜித் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 115 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 512 ரன்கள் எடுத்த நிலையில் தமிழக அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நாகாலாந்து அணி, 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. டெகா நிஷ்சல் 80 ரன்களும், யுகந்தர் சிங் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
குர்ஜப்நீத் சிங் 12 ஓவர்கள் பந்துவீசி 34 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-ம் நாள் ஆட்டத்தை நாகாலாந்து அணி தொடர்ந்து விளையாட உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT