Published : 26 Oct 2025 01:07 PM
Last Updated : 26 Oct 2025 01:07 PM
சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு வெள்ளித்திரையில் வெளியான திரைப்படம் ‘பைசன்: காளமாடன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தின் கதை இந்திய அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டது.
இந்த படத்தில் 1994 ஆசிய போட்டியில் பாகிஸ்தான் உடன் ரீ-மேட்ச் ஆடும் முக்கிய முடிவை எடுப்பார் அப்போதைய இந்திய கபடி அணியின் கேப்டன் எஸ்.ராஜரத்தினம். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் உள்ள கணபதிபுரம் தான் அவரது பூர்வீகம். அர்ஜுனா விருது பெற்ற முதல் தமிழக கபடி வீரர் என அறியப்படுகிறார்.
‘பைசன்: காளமாடன்’ படத்தில் அவரது உறுதி மற்றும் கபடி விளையாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அண்மையில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் அவர் பகிர்ந்து கொண்டது.
“எங்கள் கிராமத்தில் கபடி விளையாட்டு வீரர்கள் அதிகம். எனது சகோதரர்கள் மற்றும் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் கபடி விளையாடியதை பார்த்து எனக்கு இந்த விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. 1980-களில் எங்கள் ஊரை சேர்ந்த கபடி வீரர்கள் அரசு பணியும் பெற்றுள்ளனர்.
நான் 1980-84 வரை தமிழக அணியின் கேப்டனாக தேசிய போட்டியில் விளையாடினேன். பின்னர் 1984-93 வரை இந்திய ரயில்வே அணிக்காக விளையாடினேன். என் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது 1990-ல் சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றதுதான்.
1994-ல் நடைபெற்ற ஆசிய போட்டியில் மூன்று தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றோம். நான், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணேசன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்தோம். படத்தில் வருவது போல இந்திய கபடி அணியின் நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் இடையிலான உரையாடல் இருந்தது. எங்கள் அணியின் மீது நம்பிக்கை இருந்த காரணத்தால் பாகிஸ்தான் உடன் மீண்டும் விளையாடினோம். வெற்றி பெற்றோம்.
கபடி உட்பட அனைத்து விளையாட்டுகளிலும் தகுதியான வீரர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்ய அரசு தகுந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். கோப்பைகள் மற்றும் பதக்கங்களை தாண்டி எளிய பின்புலம் கொண்ட வீரர்களுக்கு பணப் பலன்கள் மிகவும் அவசியம். அது வீரர்களின் விளையாட்டு ஆர்வத்துக்கு ஊக்கம் தரும். ஏனெனில், என்னைப் போல் கபடி விளையாட்டில் உச்சம் தொட்டவர்களுக்கு அரசு பணிதான் அடித்தளமாக அமைந்தது. அதனடிப்படையில் தான் எங்களால் தொடர்ந்து முன்னேற முடிந்தது” என எஸ்.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.
1987-ல் இந்திய கபடி அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் எஸ்.ராஜரத்தினம். 1990 மற்றும் 1994 ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வென்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT