Published : 25 Oct 2025 07:38 PM
Last Updated : 25 Oct 2025 07:38 PM

ரோஹித் 121, கோலி 74 ரன்கள் விளாசல் - ஆஸி.க்கு எதிராக இந்தியா ஆறுதல் வெற்றி!

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

சிட்னியில் இன்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் சேவியர் பார்ட்லெட் நீக்கப்பட்டு நேதன் எலிஸ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டி நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக மேட் ரென்ஷா 58 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 56 ரன்களும் கேப்டன் மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் சேர்த்தனர். பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா 8.4 ஓவர்களை வீசி 39 ரன்களை வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் அலெக்ஸ் கேரி (24), மிட்செல் ஓவன் (1), கூப்பர் கானொலி (23), ஜோஷ் ஹேசில்வுட் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களை (மேத்யூ ஷார்ட் 30 ரன்கள், மேட் ரென்ஷா 56 ரன்கள்) வீழ்த்தினார். அதிரடி தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 29 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் மிட்செல் மார்ஷ் அரை சதத்தை நெருங்கிய நிலையில் அக்சர் படேல் பந்தில் போல்டானார். பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

237 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தனது 33-வது சதத்தை விளாசிய ரோஹித் சர்மா 125 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடி தனது தனது 75-வது அரை சதத்தை கடந்த விராட் கோலி 81 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 170 பந்துகளில், 168 ரன்கள் சேர்த்தது. முன்னதாக கேப்டன் ஷுப்மன் கில் 26 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. முதல் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக ரோஹித் சர்மா தேர்வானார். அவர், இந்தத் தொடரில் 202 ரன்கள் சேர்த்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x