Published : 25 Oct 2025 07:26 PM
Last Updated : 25 Oct 2025 07:26 PM
சிட்னி: சிட்னி ஒருநாள் போட்டியில் தனது 50-வது சதம் விளாசி சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. அதேவேளையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் 2-ம் இடத்தைப் பிடித்தார் விராட் கோலி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மாவின் சதம், விராட் கோலியின் அரை சதம், ஹர்ஷித் ராணாவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
இன்றைய போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இது அவரது 50-வது சதமாக அமைந்தது. டெஸ்டில் 12 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 33 சதங்களையும், டி20-ல் 5 சதங்களையும் ரோஹித் பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக 50 சதங்களை விளாசி உள்ளார் ரோஹித் சர்மா.
சிட்னி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான ரோஹித் சதம் விளாசினார். ஆஸ்திரேலிய மண்ணில் அவர், அடித்த 6-வது சதம் இதுவாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார் ரோஹித் சர்மா. இந்த வகையில் விராட் கோலி, இலங்கையின் குமார் சங்ககரா ஆகியோர் தலா 5 சதங்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்துள்ளார் ரோஹித் சர்மா.
விராட் கோலி ரன் வேட்டையில் 2-வது இடம்: இன்றைய போட்டியில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேனான விராட் கோலி 74 ரன்கள் விளாசினார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இலங்கையின் குமார் சங்ககராவை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை பிடித்தார் விராட் கோலி. சங்ககரா 380 இன்னிங்ஸ்களில் 14,234 ரன்கள் குவித்திருந்தார். விராட் கோலி 293 இன்னிங்ஸ்களில் 14,235 ரன்கள் குவித்து 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் 452 இன்னிங்ஸ்களில் 18,426 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT