Published : 25 Oct 2025 06:56 AM
Last Updated : 25 Oct 2025 06:56 AM
சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பெர்த் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடிலெய் டில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி தொடரை இழந்துவிட்ட நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆறுதல் வெற்றி பெற இந்திய அணி முயற்சிக்கக்கூடும். முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட தவறிய சீனியர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா 2-வது போட்டியில் 97 பந்துகளில், 73 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஆனால் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி தொடர்ச்சியாக 2-வது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.
இவர்கள் இருவருக்குமே இது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கக்கூடும். இதனால் இருவரும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். ஷுப்மன் கில்லும் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் 61 ரன்கள் சேர்த்த ஸ்ரேயஸ் ஐயரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். மேலும் இரு போட்டியிலும் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் படேலும் மீண்டும் ஒரு சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடும்.
சிட்னி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் குல்தீப் யாதவ் சேர்க்கப்படக்கூடும். அவர், களமிறங்கும் பட்சத்தில் நிதிஷ் குமார் ரெட்டி அல்லது வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படக்கூடும். இதேபோன்று வேகப்பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டித் தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கக்கூடும். இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அந்த அணி இந்தியாவை முழுமையாக அனைத்து ஆட்டங்களிலும் இதுவரை வென்றது கிடையாது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதன் முறையாக இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் போட்டி தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைக்கும்.
அடிலெய்டு போட்டியில் இளம் வீரர்களான மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி ஆகியோர் அற்புதமாக பேட்டிங் செய்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்த போதிலும் இவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடி வெற்றியை வசப்படுத்தியிருந்தனர். இவர்களுடன் மேட் ரென்ஷாவும் இரு போட்டிகளிலும் உரிய பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த இளம் அதிரடி பட்டாளங்கள் மீண்டும் ஒரு முறை இந்திய பந்துவீச்சுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். அதேவேளையில் கடந்த இரு ஆட்டங்களிலும் மட்டையை சுழற்ற தவறிய டிராவிஸ் ஹெட், பெரிய அளவிலான இன்னிங்ஸ் விளையாட முயற்சிக்கக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் ஆல்ரவுண்டரான ஜேக் எட்வர்ட்ஸ் அறிமுக வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. அதேவேளையில் மேட் குனேமனும், ஆடம் ஸாம்பாவுடன் இணைந்து சுழலில் இந்திய அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே தொடரை வென்றுவிட்டதால் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
சிட்னியில் இந்தியா எப்படி? - சிட்னி மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 19 முறை ஒருநாள் போட்டிகளில் மோதி உள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்திய அணி 2 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த வெற்றிகள் 2008 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டங்களில் கிடைக்கப்பெற்றவையாகும். ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT