Published : 24 Oct 2025 12:48 PM
Last Updated : 24 Oct 2025 12:48 PM

விக்கெட் வீழ்த்தாவிட்டாலும் ஹேசில்வுட் ஒரு ‘கிங்’ தான்!

ஜோஷ் ஹேசில்வுட் நேற்று அடிலெய்டில் வீசியப் பந்து வீச்சு, விக்கெட்டுகளுக்கு அப்பால் ஒரு பேரழகு என்பதுதான் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த அளவுக்குத் துல்லியம் கிளென் மெக்ராவிடமும் நாம் பார்த்ததில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் மெக்ரா ஏதாவது செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில்தான் கவனம் செலுத்துவார், ஆனால் ஹேசில்வுட், ஷான் போலாக், பிலாண்டர் போன்றவர்கள் பேட்டர்களின் சுதந்திரத்தைத் தங்களது லைன் மற்றும் லெந்த்தினால் காலி செய்பவர்கள்.

நேற்று 10 ஓவர்கள் வீசிய ஹேசில்வுட் 2 மெய்டன்களுடன் 29 ரன்களையே விட்டுக் கொடுத்தார். விக்கெட் இல்லை என்பது பந்து வீச்சின் தரத்தை மதிப்பிடாது. மொத்தம் 60 பந்துகளில் 43 பந்துகள் டாட் பால்கள். மட்டையைக் கடந்து சென்ற பந்துகள் இதில் அதிகம். அதுவும் அடிலெய்ட் பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் கேட்கவே வேண்டாம், அவரது ஹை ரிலீஸ் பாயிண்டிலிருந்து பந்துகள் சொன்ன இடத்தில் அப்பட்டமாக பிட்ச் ஆகி பேட்டர்களை படாத பாடு படுத்தி எடுத்து விடுகிறது. இருபுறமும் ஸ்விங் செய்து பேட்டர்களைக் குழப்பவும் செய்கிறார் ஹேசில்வுட்.

கிரிக் இன்போ புள்ளி விவரங்களின்படி 21 முறை அவர் பேட்டை பீட் செய்தார். 6 முறை எட்ஜ் எடுத்தது. அதிலும் 21 பீட்டனில் பேட்டர்கள் தடுத்தாடும்போதே பீட்டன் ஆகியுள்ளனர். ரோஹித் சர்மாவுக்கு பெரும் சவால்தான், ஆனால் ரோஹித் நின்று பார்க்கலாம் என்று நின்றுவிட்டார், கடினமான காலக்கட்டத்தைப் பொறுமையுடன் கடந்தார். ஆனால் கோலிக்கு அதிர்ஷ்டமில்லை. கோலி எல்.பி.ஆவது மிக மிக அரிதான தருணமே.

கையில் வித்தையை வைத்திருப்பதால் பந்தை வெவ்வேறு விதங்களில் ரிலீஸ் செய்கிறார், இதனால் ஒன்று ஒரே லெந்தில் பிட்ச் ஆகி உள்ளே வருகிறது, மற்றொன்று வெளியே ஸ்விங் ஆகிறது. புதிய பந்தில் 7 ஓவர்களை வீசினார். இந்த 42 பந்துகளில் 31 பந்துகளை ரோஹித் சர்மா எதிர்கொள்ள வேண்டிய தலையெழுத்து நேற்று. பேட்டர்களை கிரீசில் நடனமாட விடுவதில் ஹேசில்வுட் போல் ஒரு பவுலர் இப்போது இல்லை என்றே கூறலாம்.

இவர் ரோஹித்தை வைத்து ஆட்ட ஆட்டத்தான் ஷுப்மன் கில் எதிர்முனையில் பொறுமை இழந்து பார்ட்லெட் பந்தை ஏறி வந்து அடித்து ஆட்டமிழந்தார். முதல் ஸ்பெல் மட்டுமல்ல 2-வது ஸ்பெல்லுக்கு மீண்டும் 34-வது ஓவரில் வந்தார். அப்போதும் பந்துகள் எழும்பின, ஸ்விங் ஆகின.

வேறொரு நாளில் வேறொரு அணி இது போன்ற துல்லியப் பந்து வீச்சுக்கு ஹேசில்வுட்டின் முதல் 7 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்திருக்கும். அந்த விதத்தில் ரோஹித் சர்மா, ஸ்ரேயஸ் அய்யரைப் பாராட்டத்தான் வேண்டும்.

இதைத்தான் ஹர்ஷித் ராணா போன்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிக் கற்காவிட்டால், ஹர்ஷித் ராணா, பாகிஸ்தானில் சாத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஹாரிஸ் ராவுஃப் போல் ஆகிவிடுவார் என்பது உறுதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x