Published : 24 Oct 2025 12:22 PM
Last Updated : 24 Oct 2025 12:22 PM
அடிலெய்டில் நேற்று (அக்.23) பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி வரை போராடி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. சிட்னியில் மீதமிருக்கும் 3-வது ஒருநாள் போட்டி வெறும் சம்பிரதாயப் போட்டியாகவே இருக்கும்.
இந்த போட்டியில் இந்திய அணி எதிர்கொண்ட மொத்தம் 300 பந்துகளில் 151 பந்துகள் ரன் இல்லாத டாட் பால்கள் என்றால் எப்படி போட்டியை வெல்ல முடியும்? ரோஹித் சர்மாவால் முதல் 40 பந்துகளில் வெறும் 10 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. செம தடவலோ தடவல். ஆனால் அதன் பிறகு எழுச்சி பெற்று நல்ல இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். கடைசி வரை நின்றிருந்தால் ஒருவேளை 300 ரன்களை எட்டியிருக்கலாம் அப்போது ஆஸ்திரேலியாவுக்கு இலக்கை எட்டுவது கடினமாகியிருக்கலாம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களுக்கு இடையே ஷுப்மன் கில் - கவுதம் கம்பீர் அணித்தேர்வு முறை, கில்லின் கேப்டன்சி தவறுகள் என்று எக்கச்சக்கமாக சிக்கல்கள் எழுந்துள்ளன.
அணித்தேர்வு சொதப்பல்: குல்தீப் யாதவ் உட்கார வைக்கப்பட்டது ஏன்? - 265 ரன்கள் இந்தப் பிட்சில் வெற்றிக்கான இலக்குதான். ஆனால் ஷுப்மன் கில் தோல்விக்கு விடப்பட்ட கேட்ச்களைக் காரணமாகக் கூறுகிறாரே தவிர, அவருடைய தவறுகளைப் பேச மறுக்கிறார். முதலில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள், இந்திய அணியில் அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர் எனும்போது அணியில் குல்தீப் யாதவ் இருந்திருக்க வேண்டாமா? குல்தீப் யாதவ்வின் பவுலிங்கை அனுபவமற்ற இந்த ஆஸ்திரேலிய அணியின் வீரர்களால் கணித்திருக்க முடியாது. நிச்சயம் வென்று கொடுத்திருப்பார் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. காரணம் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட்டிற்கு அற்புதமாக வீசி அவர்களை வீழ்த்திய பிறகே ஷார்ட், ரென்ஷா, கூப்பர் கனோலி, மிட்செல் ஓவன் போன்றோருக்கு அனுபவம் இல்லை. குல்தீப் யாதவ் மிடில் ஓவர்களை வீசியிருந்தால் இவர்களை காலி செய்திருப்பார். ஆகவே முதல் தவறு குல்தீப் யாதவை விளையாட்டுப் பொம்மையாக எடுப்பதும் உட்கார வைப்பதுமாகச் செய்து அவரின் திறமையை அழிக்கின்றனர்.
இரண்டாவதாக அணியில் முதல் 6 பேட்டர்கள் ஆடாததையா இந்த நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆடி விடப்போகிறார்கள். நிதிஷ் குமார் ரெட்டி எடுக்கும் 8 - 10 ரன்களை விட குல்தீப் யாதவ் அதிகமாகவே எடுப்பார். ஆகவே இவர்கள் இருவரில் ஒருவருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இருந்திருக்க வேண்டும்.
வாஷிங்டன் சுந்தருக்கு முழு ஓவரையும் கொடுக்காமல் விட்டது ஏன்? - 4 அனுபவமற்ற வீரர்களுக்கு அடுத்த படியாக மேட்சை வெற்றி பெற்று கொடுப்பவர் அலெக்ஸ் கேரி. அவரை வாஷிங்டன் சுந்தர் அட்டகாசமான பந்தில் பவுல்டு செய்ய ஆஸ்திரேலியா 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் என்று இருந்தது. ஆட்டம் 50-50 என்று இருதரப்புக்கும் வாய்ப்பு நிலையில்தான் இருந்தது.
முதலில் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரு ஓவர் கொடுத்தார். அதில் சுந்தர் 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார். புதிராக அடுத்த ஓவரை வாஷிங்டன் சுந்தருக்கு கொடுக்காமல் நிதிஷ் குமார் ரெட்டியைக் கொண்டு வந்தார். அந்த 3 ஓவர் மேட்சையே ஆஸ்திரேலியா பக்கம் சாய்த்தது. 3 ஓவரில் 24 ரன்களை அவர் கொடுத்தார். நிதிஷ் குமாருக்கு ஏன் ஓவர் கொடுக்கவில்லை என்று கேட்போம் என்று கொடுத்தார் என்று வைத்துக் கொண்டால் கூட எப்போது கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கேப்டன் தெளிவில்லாமல் முடிவெடுக்கிறார் என்றால் ஷுப்மன் கில் கேப்டன்சி ஐயப்பாடுக்குரியதே.
பிறகும் தவறு செய்தார் ஷுப்மன் கில். வாஷிங்டன் சுந்தர் மிட்செல் ஓவனையும் வீழ்த்தினார். ஆனால் அப்போது ஆட்டம் ஏறக்குறைய ஆஸ்திரேலியா வெற்றி என்ற நிலைக்கு வந்து விட்டது. ஏன் சுந்தரின் 10 ஓவர்களை ஒரேயடியாக முடிக்கவில்லை, அப்படி முடித்திருந்தால் ஒருவேளை சுந்தர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை முன்கூட்டியே முடித்திருக்கலாமே? சுந்தரின் 10 ஓவர் கோட்டாவில் 7 ஓவர் அவரும், 3 ஓவர் நிதிஷ் குமார் ரெட்டி என்று ஏன் சிந்தனையற்று சொதப்ப வேண்டும்.
இன்னொன்று நேற்று ஹர்ஷித் ராணா பேட்டிங்கில் இரண்டு அருமையான கிளாஸ் கட் ஷாட்களுடம் 24 ரன்களை விரைவில் எடுத்து ஸ்கோரை 265 ரன்களுக்கு இவரும் அர்ஷ்தீப் சிங்கும் கொண்டு சென்றனர். பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா முதல் ஸ்பெல் அருமையாக வீசினார். ஆனால் 2-வது ஸ்பெல்லில் ஒரே ஷார்ட் ஆக வீசி செம சாத்து வாங்கி 7 ஓவர்களில் 59 ரன்கள் வாரி வழங்கினார். அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளாக வீச வீச மிட்செல் ஓவன் பின்னி எடுத்து விட்டார். கில் என்ன செய்து கொண்டிருந்தார்? ஏன் அப்படி வீசாதே என்று ராணாவிடம் கடிந்து கொள்ளவில்லை? என்ன கேப்டன்சி இது. கூப்பர் கனோலி கடைசி 3 ஒருநாள் போட்டிகளில் எடுத்த ஸ்கோர்கள் 7, 3, 0.
போட்டுத் தாக்கிய மிட்செல் ஓவன்: இதற்கு முன் ஆடிய லோக்கல் போட்டியிலேயே 2 போட்டிகளில் 14 மற்றும் 8 தான் அடித்துள்ளார். இது அவருக்கு 2-வது போட்டிதான், இவரை அடிக்கவிடலாமா? போட்டு நெருக்க வேண்டியதுதானே. மேலும், ஸ்பின்னர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய பேட்டர்களை அட்டாக்கிங் களவியூகத்தில் நெருக்கியிருக்க வேண்டும். ஆனால், கில் செய்த களவியூகமோ நிறைய இடைவெளிகளில் நிறைய சிங்கிள்கள், இரண்டுகள் எடுக்கும் படியாக சுலபமாக அமைந்தது.
முதலில் மேத்யூ ஷார்ட் அலெக்ஸ் கேரி எளிதில் சிங்கிள்களை எடுத்தனர். பிறகு கூப்பர் கனோலி - ஷார்ட்டிற்கும் இடையே சிங்கிள்கள், இரண்டுகள் எளிதில் வந்தன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தியிருந்தால் ஒருவேளை இந்திய அணி இன்னும் ஆஸ்திரேலியாவை நெருக்கியிருக்கலாம். செய்யாது போனதால் அடிலெய்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியைச் சந்தித்தது இந்திய அணி. இதோடு ஷுப்மன் கில் தனது கேப்டன்சியில் முதல் 2 ஒருநாள் போட்டிகளையும் தோற்று தேவையற்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT