Published : 24 Oct 2025 10:34 AM
Last Updated : 24 Oct 2025 10:34 AM
அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. தனது 59-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 97 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அக்சர் படேல் 41 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சேர்த்தனர்.
கேப்டன் ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். சீனியர் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காத நிலையில் சேவியர் பார்ட்லெட் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கே.எல்.ராகுல் 11, வாஷிங்டன் சுந்தர் 12, நிதிஷ் குமார் ரெட்டி 8 ரன்களில் நடையை கட்டினர். இறுதிக்கட்டத்தில் ஹர்ஷித் ராணா 18 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 14 பந்துகளில் 13 ரன்களும் சேர்த்து பலம் சேர்த்தனர். 9-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 37 ரன்கள் சேர்த்தது.
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4, சேவியர் பார்ட்லெட் 3, மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 266 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.2 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேத்யூ ஷார்ட் 78 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 74 ரன்களும், 22 வயதான இடது கை பேட்ஸ்மேனான கூப்பர் கானொலி 53 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், மிட்செல் ஓவன் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.
கேப்டன் மிட்செல் மார்ஷ் 11, டிராவிஸ் ஹெட் 28, அலெக்ஸ் கேரி 9, மேட் ரென்ஷா 30, சேவியர் பார்ட்லெட் 3, மிட்செல் ஸ்டார்க் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். முகமது சிராஜ், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்த தோல்வியால், கடந்த 17 வருடங்களாக அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடையாமல் இருந்த இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்தது.
மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி ஜோடி ஒரு கட்டத்தில் அதிரடியாக விளையாடி 6.3 ஓவர்களில் 59 ரன்களை விளாசி அணியின் வெற்றியை எளிதாக்கியது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 3 ஒருநாள் போட்டி தொடர்களை இழந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஆடம் ஸாம்பா தேர்வானார். பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அந்த அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
தோல்விக்கு என்ன காரணம்?
>ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் ரன்கள் சேர்க்க தடுமாறினார்கள். ஒருவேளை நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக குல்தீப் யாதவை இந்திய அணியில் சேர்த்திருந்தால் பலன் கிடைத்திருக்கும். நிதிஷ் குமார் பேட்டிங்கில் 8-வது வீரராக களமிறங்கி 10 முதல் 12 பந்துகளையே எதிர்கொள்கிறார். பந்து வீச்சில் 3 முதல் 4 ஓவர்களை மட்டுமே வீசுகிறார்.
>ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த போதிலும் இளம் வீரர்களான மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், கூப்பர் கானொலி ஆகியோர் அருமையாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தனர்.
>மிட்செல் ஓவன் 23 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
>மேத்யூ ஷார்ட் 23 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை அக்சர் படேலும், 55 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை முகமது சிராஜும் பிடிக்கத் தவறினர். இதை பயன்படுத்திக் கொண்ட மேத்யூ ஷார்ட் 74 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
ஆஸி.யில் ஆயிரம் ரன்கள்: அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 73 ரன்கள் எடுத்தார். அவர், 2 ரன்களை எடுத்திருந்த போது ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அங்கு 21 ஆட்டங்களில் விளையாடி உள்ள ரோஹித் சர்மா 56.36 சராசரியுடன் 1,071 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்கள், 3 அரை சதங்கள் அடங்கும். ஸ்டிரைக் ரேட் 89.32 ஆகும். அதிகபட்ச ரன்குவிப்பு 171*.
2-வது முறையாக ‘0’: ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த விராட் கோலி, நேற்று அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 36 வயதான விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்த ஆட்டங்களில் ரன் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதன்முறையாகும்.
கங்குலியை முந்தினார் ரோஹித் சர்மா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 97பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போடடிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.
ரோஹித் சர்மா 275 போட்டிகளில் விளையாடி 11,249 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.69 ஆகும். 32 சதங்கள், 59 அரை சதங்கள் அடித்துள்ளார். அதிகபட்ச ரன் குவிப்பு 264 ஆகும். கங்குலி 308 போட்டிகளில் விளையாடி 40.95 சராசரியுடன் 11,121 ரன்கள் குவித்திருந்தார். இதில் 22 சதங்கள், 71 அரை சதங்கள் அடங்கும். இந்த வகை சாதனையில் சச்சின் டெண்டுல்கர் (18,426) முதலிடத்திலும், விராட் கோலி (14,181) 2-வது இடத்திலும் உள்ளனர்.
17 டாட் பால்கள்: இந்திய அணியின் பேட்டிங்கின் போது தொடக்க ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் அழுத்தம் கொடுத்தார். குறிப்பாக ரோஹித் சர்மாவை கடுமையாக சோதனைக்கு உட்படுத்தினார். ஹேசில்வுட்டுக்கு எதிராக தொடர்ச்சியாக 17 பந்துகளில் ரோஹித் சர்மா ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ஹேசில்வுட் 2 ஓவர்களை மெய்டன்களாக வீசி அசத்தியிருந்தார். 10 ஓவர்களை வீசிய அவர், 29 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT