Published : 23 Oct 2025 05:46 AM
Last Updated : 23 Oct 2025 05:46 AM
புதுடெல்லி: குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள மிலன், கார்டினா டி’ஆம்பெசோ நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதியை இந்திய வீரர் அபிநவ் பிந்த்ரா ஏந்திச் செல்லவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபிநவ் பிந்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறும்போது, “மிலன், கார்டினா நகரங்களில் நடைபெறும் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான தொடர் ஜோதி ஓட்டத்தில் ஜோதியை நான் ஏந்திச் செல்ல தேர்வு செய்யப்பட்டதற்காக உண்மையாகவே நன்றியுடன் இருக்கிறேன். கனவுகள், விடாமுயற்சி, விளையாட்டு உலகில் ஒற்றுமையின் சின்னமாக இருக்கும் ஒலிம்பிக் ஜோதியானது எனது மனதில் சிறந்த இடத்தை எப்போதும் பிடித்துள்ளது.
அதை மீண்டும் ஒருமுறை சுமந்து செல்வது கவுரவத்தை கொண்டு வருகிறது. மேலும், விளையாட்டு எதையெல்லாம் சாத்தியமாக்குகிறது என்பதற்கான அழகான நினைவூட்டலாக அமைந்துள்ளது. இந்த நம்பமுடியாத கவுரவத்தை எனக்கு அளித்ததற்கு ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
பெய்ஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றவர் அபிநவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT