Published : 23 Oct 2025 05:40 AM
Last Updated : 23 Oct 2025 05:40 AM
புதுடெல்லி: ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்திய ராணுவத்தில் நயிப் சுபேதாராக இணைந்தார். இதன் பின்னர் 2021-ம் தேதி சுபேதாராகவும், 2022-ம் ஆண்டு சுபேதார் மேஜராக
வும் பதவி உயர்வு பெற்றார்.
1997-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி ஹரியானா மாநிலம் பானிப்பட்டில் உள்ள காந்த்ரா கிராமத்தில் பிறந்த நீரஜ் சோப்ரா, கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதன் பின்னர் 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். முன்னதாக 2023-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, டயமண்ட் லீக் தொடர்களிலும் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கங்கள் வென்று குவித்துள்ளார். மேலும் ஈட்டி எறிதலில், 90.23 மீட்டர் எறிந்து இந்திய விளையாட்டு வரலாற்றில் மைல் கல் சாதனையையும் அவர், படைத்துள்ளார்.
விழாவில் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அவர் கூறும்போது, “லெப்டினன்ட் கர்னல் (கவுரவ) நீரஜ் சோப்ரா ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியவர், விளையாட்டு சகோதரத்துவம் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள தலைமுறைகளுக்கு உத்வேகமாகச் சேவை செய்கிறார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT