Published : 22 Oct 2025 12:00 PM
Last Updated : 22 Oct 2025 12:00 PM

‘அணியில் சும்மா தொற்றிக் கொண்டிருக்க கூடாது’ - ரோஹித், கோலிக்கு பாண்டிங் அட்வைஸ்

புதுடெல்லி: ‘ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சும்மா அப்படியே அணியில் தொற்றிக் கொண்டு 2027 உலகக் கோப்பை வரை நீடிக்கலாம் என்று ஓட்டக் கூடாது’ என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் தங்கள் கடைசி தொடரை ஆடி வருகின்றனர். அன்று பவுன்ஸ் பிட்சில் பெர்த்தில் இருவருமே சொதப்பி ஆட்டமிழந்தனர். அடிலெய்டில் இன்று 2-வது போட்டியில் நிச்சயம் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய இருவருமே விரும்புவார்கள்.

சர்வதேச போட்டிகளிலேயே ஆடாமல் திடீரென பெர்த்தில் வந்து ஆடுவது கடினம். அவர் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் சரி, அதிலும் ஒருவர் லண்டனில் செட்டில் ஆகிவிட்டவர், அணியுடன் எப்படி ‘ஜெல்’ ஆக முடியும் என்றும் தெரியவில்லை.

இந்நிலையில், ரிக்கி பாண்டிங் ஐசிசி ரிவியூவில் கூறும்போது, “யாராக இருந்தாலும் சரி ஒரு வார்த்தை மட்டும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது, அதாவது ‘நான் கிரிக்கெட்டில் அனைத்தையும் சாதித்து விட்டேன்’ என்று கூறுவது தவறு. கடைசி கட்டத்தில் இருந்தாலும் குறுகிய கால இலக்குகளை எந்த ஒரு வீரரும் வைத்துக் கொள்ள வேண்டும்.

சும்மா அப்படியே அணியில் தொற்றிக் கொண்டு 2027 உலகக் கோப்பை வரை நீடிக்கலாம் என்று ஓட்டக் கூடாது. விராட் உத்வேகமான நபர். அவர் இந்த ரீதியில் சிந்திக்க வேண்டும், பெரிய இலக்குகள் வேண்டாம் ஆனால் குறுகிய கால இலக்குகளை அவர் தனக்குத் தானே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தொடரில் நம்மால் என்ன சாதிக்க முடியும் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து அடுத்த உலகக் கோப்பை வரும் வரை காத்திருந்து நேரத்தை வீணடிப்பதில் என்ன பயன்?

ரோஹித், கோலியைப் பொறுத்தவரை இந்தியாவின் சிறந்த அணியில் ஆடுகிறார்கள். இருவருமே சிறந்த வீரர்கள், ஆனால் இப்போதிலிருந்து உலகக் கோப்பைக்குள் இவர்கள் இருவராலும் தங்களின் சிறந்த ஆட்டத்தைக் கண்டுபிடித்துக் கொள்ள முடியுமா?இதற்கான விடை இந்தத் தொடரில் தெரிந்து விடும்.” என்றார் ரிக்கி பாண்டிங்.

ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் கடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் சொல்லிக் கொள்ளும் படியாக ஆடவில்லை. குறிப்பாக ரோஹித், கோலியாவது பெர்த் வெற்றியில் தன் சதத்தின் மூலம் பங்களிப்புச் செய்தார். ஆனால் கோலியும் அந்தச் சதத்திற்குப் பிறகு 8 இன்னிங்ஸ்களில் 90 ரன்களை மட்டுமே எடுத்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து தொடருக்கு முன்பாக இருவருமே ரிட்டையர்மெண்ட் அறிவித்து விட்டனர். இப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் ஆடி வருகின்றனர். இதுவும் எத்தனை நாளைக்கு ஓடும் என்பது அவர்களது பங்களிப்பைப் பொறுத்தே உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x