Published : 22 Oct 2025 09:47 AM
Last Updated : 22 Oct 2025 09:47 AM
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
பவுன்ஸ் ஆடுகளமான பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி 8 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இவர்கள் இருவருமே 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட விரும்புகின்றனர். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஐசிசி பகுப்பாய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியுடன் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
யாரிடமிருந்தும் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம் என்னவென்றால், 'நான் விளையாட்டில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டேன்' என்பதுதான், இப்போதே 2027-ம் ஆண்டு உலகக் கோப்பையை அடைய முயற்சி செய்யாமல், சில குறுகிய கால இலக்குகளை கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
விராட் கோலி எப்போதும் மிகவும் ஊக்கம் கொண்ட நபராக இருந்து வருகிறார். அடுத்த உலகக் கோப்பைக்காகக் காத்திருந்து நேரத்தைக் பாழாக்குவதற்கு பதிலாக, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரில் அவர், சில இலக்குகளையும் அடையக்கூடிய விஷயங்களையும் தனக்குத்தானே அமைத்து கொண்டிருப்பார் என்று நினைக்க நான் விரும்புகிறேன்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை பற்றி நமக்குத் தெரிந்தது எல்லாம், அவர்கள் சிறந்த வீரர்கள் என்பதுதான். ஆம், நிச்சயமாக அவர்கள் இந்தியாவின் சிறந்த அணியில் உள்ளனர். ஆனால் தற்போது முதல், உலகக் கோப்பை வரை அவர்களால் தங்கள் சிறந்த திறனை கண்டுபிடிக்க முடியுமா?. இதற்கு பதில், இந்த குறுகிய காலத்தில் நடைபெறும் இந்த ஆஸ்திரேலிய தொடர்தான். இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT