Published : 18 Oct 2025 12:53 PM
Last Updated : 18 Oct 2025 12:53 PM
காபூல்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் தெக்ரிக் இ-தலிபான்களுக்கு (டிடிபி) ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டி வரும் பாகிஸ்தான், ஆப்கனில் உள்ள தெக்ரிக் இ தலிபான்களை குறிவைத்து கடந்த வாரம் ராணுவ தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கனிஸ்தான், பதில் தாக்குதலை நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், 2 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள இரு தினங்களுக்கு முன்பு இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் ஆப்கனின் பாக்டிகா மாகாணத்தில் நடத்திய தாக்குதலில் அந்நாட்டைச் சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் உயிர்த்தியாகம் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மாகாண தலைநகர் ஷரானாவில் ஒரு நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது அவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடன் மேலும் 5 பேரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்தனர்.
துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் தியாகத்துக்கு ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆப்கன் விளையாட்டு சமூகத்துக்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் கிரிக்கெட் குடும்பத்துக்கும் இது ஒரு பெரிய இழப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாகிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் அணி விலகுகிறது. தியாகிகளுக்கு அல்லா உயர்ந்த பதவிகளை வழங்குவாராக. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவன் ஆசீர்வதிப்பாராக” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டித்தனமானது. இந்த அநீதியான, சட்டவிரோத நடவடிக்கைகள் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும். இவற்றை எளிதாக கடக்க முடியாது. நமது நாட்டின் கண்ணியம் மற்ற அனைத்தையும்விட முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT