Published : 18 Oct 2025 09:12 AM
Last Updated : 18 Oct 2025 09:12 AM
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, விராட் கோலி களமிறங்க உள்ளனர். 7 மாதங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
டெஸ்ட், டி20 வடிவங்களில் இருந்து இருவரும் ஏற்கெனவே ஓய்வு பெற்று விட்டதால் 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு இப்போது இருந்தே சிறந்த திறனை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்க வேண்டும், இல்லையென்றால் அணியில் இடம் பெறுவது கடினம் என ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற தனியார் சானல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவரான அஜித் அகர்கர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆட்டத்திலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை சோதனைக்கு உட்படுத்துவது முட்டாள்தனமானதாக இருக்கும். அவர்கள் விளையாடத் தொடங்கியதும் அவர்கள் மதிப்பீடு செய்யப்படுவார்கள், ஆனால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன்கள் குவிக்காவிட்டால், அவர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், 3 போட்டிகளிலும் சதங்கள் விளாசினால் அவர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்றும் அர்த்தமாகாது. 2027 உலகக் கோப்பைத் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய இன்னும் நாள்கள் இருக்கின்றன.
முகமது ஷமி இங்கே இருந்திருந்தால், நான் அவருக்கு பதில் அளித்திருப்பேன். உடற்தகுதியுடன் இருந்தால், அவரை போன்ற ஒரு பந்து வீச்சாளரை ஏன்? தேர்வு செய்யாமல் இருக்கப் போகிறோம். நான் அவருடன் பலமுறை பேசியிருக்கிறேன். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக, அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவதற்கு அவர் உடற்தகுதியுடன் இல்லை. இவ்வாறு அஜித் அகர்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT