Published : 14 Oct 2025 12:51 PM
Last Updated : 14 Oct 2025 12:51 PM

மே.இ.தீவுகளின் 2-வது இன்னிங்ஸில் ஷுப்மன் கில்லின் கேப்டன்சி சொதப்பல்!

டெல்லி டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நன்றாக ஆடி கடினமான ஃபைட் கொடுத்தனர். இந்திய அணி பந்து வீச்சு இந்தப் பிட்சில் ஒன்றும் எடுபடவில்லை. கேம்பெல், ஷேய் ஹோப் சதங்களை எடுத்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக கடைசி விக்கெட் ஜோடி ஜஸ்டின் க்ரீவ்ஸ் (50), ஜெய்டன் சீல்ஸ் (32) சேர்ந்து 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுமையைச் சோதித்தனர்.

இதில் கடைசி விக்கெட்டுக்காக மட்டுமின்றி 2-வது இன்னிங்ஸிலேயே ஷுப்மன் கில்லின் கேப்டன்சி சொதப்பலாக அமைந்தது. ஃபாலோ ஆன் கொடுத்திருக்கிறோம், அட்டாக்கிங் ஃபீல்டிங் செட் அப் செய்து விக்கெட்டுகளை வீழ்த்த வைக்க வேண்டுமே தவிர ஆட்டத்தின் போக்குடன் அவரது போக்கும் சென்றது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

முதலில் இந்தப் பிட்சில் பவுலர்கள் களைப்படைந்த நிலையில் ஃபாலோ ஆன் கொடுத்திருக்கக் கூடாது. மீறிக் கொடுத்தார். அதனால் மே.இ.தீவுகள் அந்த வாய்ப்பை நல்வாய்ப்பாக மாற்றிக் கொண்டனர். இந்த விதத்தில் அந்த அணி பாராட்டுக்குரியதே. இல்லையெனில் போட்டி வெறும் ஒரு தலைபட்சமாகப் போய் அறுவையான டெஸ்ட் போட்டியாக மாறியிருக்கும்.

3 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் என்று மே.இ.தீவுகள் நல்ல நிலையில்தான் இருந்தது. எப்படியோ 9 விக்கெட்டுகளுக்கு 311 ரன்கள் என்று அவர்கள் முன்னிலையைக் குறைத்த பிறகும் கூட கடைசி விக்கெட்டை எடுக்க முடியாமல் ஷுப்மன் கில் படை திணறியது. காரணம் ஷுப்மன் கில்லின் களவியூகம், யோசனையற்ற கேப்டன்சியே.

கடைசி விக்கெட்டை எடுக்க ஏன் திணறல் என்றால் ஷுப்மன் கில் களவியூகத்தை நெருக்காமல் பரவலாக்கி பீல்டர்களைத் தள்ளித் தள்ளி நிறுத்தியதால் சிங்கிள்கள் இஷ்டத்துக்கு வந்தன. எப்படி இங்கிலாந்தில் வாஷிங்டன் சுந்தரை ஒரு போட்டியில் 69-வது ஓவரில் கொண்டு வந்தாரோ அதே போல் கூட நேற்று நிதிஷ் குமார் ரெட்டியை பந்து வீச அழைக்கவில்லை. அவர் ஆல்ரவுண்டர் என்றுதானே அணியில் எடுத்துள்ளார்கள், பின் ஏன் கொடுக்கவில்லை?

கடைசி விக்கெட்டில் ஒரு பேட்டர் நிற்கிறார் என்றாலும் கூட இப்போதெல்லாம் பீல்டை பரவலாக்கி விடுகின்றனர். இது டெஸ்ட் போட்டியின் வீழ்ச்சியைக் காட்டுகிறது. யாராக இருந்தால் என்ன? அட்டாக் செய்ய வேண்டியதுதானே? கொஞ்சம் எம்.எஸ்.தோனி போல் ஷுப்மன் கில்லும் கற்பனை வளமில்லாமல் 2-வது இன்னிங்சில் கேப்டன்சி செய்தார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விக்கெட்டை அவர்களே கொடுத்து விட்டுச் செல்லட்டும் என்பது போல் கேப்டன்சி செய்தார்.

இது பலவீனமான மே.இ.தீவுகள் என்பதால் ஒன்றும் தெரியவில்லை, பாதிப்பில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இப்படிச் செய்தால் என்ன ஆகும்? பும்ராவை ரொம்பவும் வேலை வாங்குகிறோமோ என்று அவருக்கு ஓவரே கொடுக்கவில்லை. அவரிடம் கொடுத்த போது அவர் விக்கெட்டை வீழ்த்தி விட்டார். இதை முதலிலேயே செய்ய வேண்டியதுதானே? என்ன கேப்டன்சி இது? கேப்டன்சியில் ஒரு உத்வேகமே இல்லை. ரன்கள் நாலாப்பக்கமும் வந்தன. கடைசி விக்கெட்டை எடுக்க ஒரு கேப்டனுக்கு உத்திகள் தெரியவில்லை என்றால் இவர்தான் இந்திய அணியின் அனைத்து வடிவ ஃபியூச்சர் கேப்டனா?

இது ஷுப்மன் கில் அணி என்று கம்பீர் இந்த விஷயத்தில் ‘எஸ்கேப்’ ஆக முடியாது. முதலில் கம்பீரே கேப்டன்சி நபர் கிடையாது. அவருக்கே கேப்டன்சி பற்றிய நுணுக்கங்கள் நுட்பங்கள் தெரியாது, ஆனால் பயிற்சியாளராக உயர்வு பெற்றதை என்னவென்று சொல்வது?

டெல்லி டெஸ்ட்டில் இந்தியா வெற்றி: மேற்கு இந்தியத் தீவுகள் அணி உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இந்தியா. மேற்கு இந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் பெற்றது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவ் பெற்றார். தொடர் நாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா வென்றார். இந்த தொடரை 2-0 என இந்தியா வென்றுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா பெற்றுள்ள முதல் வெற்றி இது. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x