Published : 14 Oct 2025 12:31 PM
Last Updated : 14 Oct 2025 12:31 PM
சச்சின் டெண்டுல்கரின் ஞாபக சக்தியை அவருக்கு நெருக்கமானவர்கள் யானையின் ஞாபக சக்தியுடன் ஒப்பிடுவார்கள். அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றினால் நெகிழ்ச்சியடைந்துள்ளார், அவரது ஆரம்பகால சகாக்களில் ஒருவரும் முன்னாள் இந்திய வீரருமான பிரவீண் ஆம்ரே.
சச்சின் டெண்டுல்கர் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு இப்போது சொல்வார் என்று தான் சற்றும் நினைக்கவில்லை என்று பிரவீண் ஆம்ரேவை சந்தோஷ அதிர்ச்சியடையச் செய்த சம்பவம் இதுதான்.
சச்சின் டெண்டுல்கரின் பால்யகால கோச் ராமாகந்த் அச்ரேக்கர் ஒருமுறை ஆம்ரேவின் பேட்டிங்கை உற்று நோக்கு என்று சச்சினிடம் கூறியுள்ளார். அப்போதுதான் ஆஸ்திரேலியாவில் யு-19 டூரில் ஆடிவிட்டு வந்திருக்கிறார் பிரவீன் ஆம்ரே.
ஆம்ரேவின் ஆட்டத்தைப் பார் என்று பயிற்சியாளர் சொன்னார், ஆனால் சச்சின் டெண்டுல்கரின் கண்களை உறுத்தியதோ ஆம்ரே தன் கிரிக்கெட் கிட் பேக்கினுள் வைத்திருந்த ஃபாரின் ஸ்போர்ட்ஸ் ஷூக்களே.
ஷர்தாஸ்ரம் வித்யாமந்திரில் பிரவீன் ஆம்ரே, சச்சினுக்கு சீனியர். சீனியரிடம் போய் எப்படி ஷூவைக் கொடுங்கள் என்று கேட்பது என்று சச்சின் தயங்கிக் கொண்டே அதே வேளையில் ஏக்கத்துடன் அந்த ஷூக்களைப் பார்த்து கொண்டே இருந்ததைப் புரிந்து கொண்ட பிரவீன் ஆம்ரே, ‘நீ சதம் அடித்தால் அந்த ஷூக்கள் உனக்குத்தான்’ என்று சச்சினுக்கு ஒரு சவாலைக் கொடுத்தார்.
சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த சச்சின், “அவரது பேட்டிங்கைப் பார்ப்பதோடு நாங்கள் அவர் பயன்படுத்தும் பேட், கால்காப்பு, ஷூக்கள், கிளவ்கள் என்று இதையும் சேர்ந்தே உற்று நோக்குவோம். அவரது கிட் பேக்கில் அற்புதமான ஷூக்கள் இருந்தது. உடனே அதை எப்படியாவது நாம் பெற வேண்டும் என்ற எண்ணம் தான் வரும். பிரவீன் என்னிடம், ‘சதம் அடி, ஷூ உனக்குத்தான்’ என்றார்.
நானும் சதம் அடித்தேன், ஆனால் அவரிடம் போய் சதம் எடுத்து விட்டேன், ஷூ தருகிறீர்களா என்று கேட்கும் தைரியம் எனக்கு இல்லை. ஆனால் பிரவின் என்னிடம் அந்த ஷூக்களைக் கொடுத்தார், என் வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு தரமான ஷூவைப் பெற்றது அப்போதுதான், இதை என்னால் மறக்க முடியாது.” என்றார் சச்சின்.
இவ்வளவு சின்ன விஷயத்தைக் கூட நினைவு கூர்ந்து பேசுகிறாரே சச்சின் என்று சந்தோஷ அதிர்ச்சியடைந்த பிரவீன் ஆம்ரே, “சச்சின் இப்போது அதை நினைவு கூர்ந்து சொல்வார் என்று நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகள் சென்றும் அவர் அதை நினைவில் வைத்திருக்கிறார், எனக்கு சுத்தமாக மறந்து போய்விட்டது. இந்தச் சம்பவம் 1987 அல்லது 88-ம் ஆண்டில் நடந்திருக்கலாம். இந்த ஒரு குணம்தான் சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட்டில் பெரிய லெஜண்டாக்கியுள்ளது. இது அவருடைய பெரிய மனித குணம். அந்த ஷூக்கள் இறக்கு மதி செய்யப்பட்டவை என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் அத்தகைய ஷூக்கள் இந்தியாவில் கிடைப்பது அரிது.
ஒரு சரியான வீரருக்குத்தான் அந்த ஷூக்களை நான் கொடுத்திருக்கிறேன் என்பதை இப்போது நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவர் இன்று கிரிக்கெட்டின் மகா பெரிய வீரர்.” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் பிரவின் ஆம்ரே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT