Last Updated : 13 Oct, 2025 09:59 PM

 

Published : 13 Oct 2025 09:59 PM
Last Updated : 13 Oct 2025 09:59 PM

சக பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர் | IND vs WI டெல்லி டெஸ்ட்

புதுடெல்லி: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் தேவை. இந்த சூழலில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் அணியின் சக பவுலர்களின் செயல்பாட்டை பாராட்டி உள்ளார்.

“இது மாதிரியான மந்தமான ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். நாங்கள் இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளோம். அனைத்து பந்து வீச்சாளர்களும் அபாரமாக செயல்பட்டனர். தொடர்ந்து நீண்ட நெடிய ஸ்பெல்களை வீசினர்.

இந்த போட்டி முழுவதும் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்ததாக நான் சொல்வேன். 5 நாட்கள் வரை நீடிக்கும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சவாலானது. அதில் முக்கியமான விஷயங்கள் என்னவென்றால் வீரர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும், ஆட்டத்தில் சிறந்து விளங்க வேண்டும். அப்போதுதான் இந்த சவாலை வெல்ல முடியும்.

உள்நாடு, வெளிநாடு என பல்வேறு இடங்களில் நாங்கள் விளையாடுகிறோம். ஒவ்வொரு சூழலும், எங்களுடன் விளையாடும் ஒவ்வொரு அணியும் எங்கள் ஆட்டத்திறனை சோதிக்கும். அதுதான் இந்த பார்மெட்டின் அழகு. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நாங்கள் 180 முதல் 200 ஓவர்கள் வரை பீல்ட் செய்துள்ளோம் என்பது கவனிக்கத்தக்கது” என வாஷிங்டன் சுந்தர் தெரிவித்தார்.

இந்த ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 8, பும்ரா 4, ஜடேஜா 4, சிராஜ் 3, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

டெல்லி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் 121 ரன்கள் இலக்கை விரட்டி வருகிறது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 58 ரன்கள் தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x