Published : 13 Oct 2025 03:37 PM
Last Updated : 13 Oct 2025 03:37 PM
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுடன் இறங்க வேண்டியது மார்னஸ் லபுஷேனா அல்லது பும்ராவை என்ன சேதி என்று கேட்ட சாம் கோன்ஸ்டாஸா என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.
சாம் கோன்ஸ்டாஸுக்கு டெக்னிக் என்றால் கிலோ என்ன விலை தெரியவில்லை. மார்னஸ் லபுஷேன் 3-ம் நிலையில் இறங்கித்தான் 11 சதங்களை எடுத்துள்ளார். அவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் ஓப்பனிங் இறக்கினார்கள், இப்போது அதே நிலை தொடருமா, அல்லது வருவது வரட்டும் சாம் கோன்ஸ்டாஸை இறக்கி இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக பேட்டை விடச்சொல்லலாமா என்பது ஒரு விவாதமாகக் கிளம்பியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டிக்கு சந்தேகம் என்று கூறப்படும் கேப்டன் பாட் கமின்ஸ், மார்னஸ் லபுஷேன் பக்கம் நிற்கிறார். “லபுஷேன் அனைத்தையும் சரியான விதத்தில் செய்து வருகிறார். கடந்த 4 ஆட்டங்களில் 3 சதங்களை எடுத்துள்ளார். அவர் சுறுசுறுப்பாக ஆடுகிறார். தன் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறார். ஆகவே அவர் சிறப்பான நிலையில் இருக்கிறார்.” என்றார்.
ஆனால் வார்னர் இதனை மறுத்து, “மார்னஸ் லபுஷேன் தடைகளைக் களைந்து நன்றாக வந்துள்ளார் அது பிரச்சினையில்லை. அதுவும் 50 ரன்களை டெஸ்ட்டில் சராசரி வைத்திருப்பவரிடம் தான் செல்வார்கள். ஆனால் 31 வயதாகும் லபுஷேன் 3-ம் நிலையில் இறங்குவதுதான் சரியாக இருக்கும். அவர் தொடங்குவதை நான் பார்க்க விரும்பவில்லை.” என்றார்.
பாட் கமின்ஸ் இதை ஏற்கவில்லை, காரணம் லபுஷேனை 3-ம் நிலையில் இறக்கி சாம் கோன்ஸ்டாஸை இறக்கினால் ஆஸ்திரேலியா மேட்ச் வின்னர்களாகக் கருதும் ஆல்ரவுண்டர்கள் க்ரீன் மற்றும் பியூ வெப்ஸ்டரில் ஒருவரைத்தான் எடுக்க முடியும். நம் அணிக்கு 2 ஆல்ரவுண்டர்கள் தேவை. இருவருமே கடந்த ஆண்டு அருமையாக ஆடியுள்ளனர்.
ஆனால், வார்னரோ மீண்டும் மீண்டும், “கோன்ஸ்டாஸ் ஓப்பனிங் இறங்குவதைப் பார்க்க விரும்புகிறேன். ஆஸ்திரேலியா ஏ தொடரில் அவர் சிறப்பாக ஆடியதைப் பார்த்தேன். ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாமே, இங்கிலாந்து பவுலிங்கை கொஞ்சம் அசைத்துப் பார்க்கலாமே. சாம் கோன்ஸ்டாஸ் என்ன செய்வார் என்பது பற்றி நாமும் முழுமையாகப் பார்த்து விடவில்லையே, ஆகவே அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் என்ன?” என்கிறார் வார்னர்.
மார்க் வாஹ், வார்னர் கூறுவதை ஏற்றுக் கொள்ள மறுத்து, லபுஷேன் ஓப்பனிங் இறங்க வேண்டும், அவரிடம் டெக்னிக் இருக்கிறது, அதுவும் இப்போது அவர் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். மேலும் ஸ்மித் 3-ம் நிலையில் இறங்க வேண்டும். கிரீன், வெப்ஸ்டர் இருவரும் நடுவரிசைக்கு பலம் சேர்ப்பார்கள். நவம்பர் 21-ம் தேதி முதல் ஆஷஸ் டெஸ்ட் பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT