Published : 12 Oct 2025 10:15 AM
Last Updated : 12 Oct 2025 10:15 AM
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகளை படைத்தார். அதன் விவரம்:
>2025-ம் ஆண்டில் ஷுப்மன் கில் 5 சதங்களை அடித்துள்ளார். இதன் மூலம் அவர், கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதிக சதங்கள்
அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
>இந்திய வீரர்களில் கேப்டனாக விராட் கோலி கடந்த 2017 மற்றும் 2018-ல் தலா 5 சதங்களை விளாசியிருந்தார். இதன் முலம் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருந்தார். இந்த சாதனையை தற்போது ஷுப்மன் கில் சமன் செய்துள்ளார்.
>கேப்டனாக ஷுப்மன் கில் 12 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்துள்ளார். கேப்டனாக குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர்களில் இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் (9 இன்னிங்ஸ்கள்), இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (10 இன்னிங்ஸ்கள்) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர். அதேவேளையில் போட்டியை கணக்கிட்டால் ஷுப்மன் கில்லும், ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டான் பிராட்மேனும் தலா 7 போட்டிகளில் கேப்டனாக 5 சதங்களை அடித்துள்ளனர். அலாஸ்டர் குக் 5 போட்டிகளிலும், கவாஸ்கர் 6 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
>டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது ஏழு முறையாவது தங்கள் அணிகளை வழிநடத்தியவர்களில் அதிக சராசரியை டான் பிராட்மேன் (101.51) வைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தை கேப்டனாக ஷுப்மன் கில் பிடித்துள்ளார். அவரது சராசரி 84.81 ஆக உள்ளது.
>மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 518 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் ஸ்கோரில் பையோ, லெக் பையோ ஒன்றுகூட கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பை, லெக் பை இல்லாமல் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டி இதுவாகும். இதற்கு முன்னர் 2018-ல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் வங்கதேச அணி 513 ரன்கள் குவித்திருந்தது.
>இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் 318 பந்துகளை வீசிய போதிலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. 300 பந்துகளுக்கு மேல் வீசி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் கைப்பற்ற முடியாமல் போனது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1972-ல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 540 பந்துகளையும், 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 432 பந்துகளையும் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் இருந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT