Published : 10 Oct 2025 05:34 PM
Last Updated : 10 Oct 2025 05:34 PM

அன்று மே.இ.தீவுகளுக்கு எதிராக அசத்திய தமிழகத்தின் ரங்காச்சாரி | மறக்க முடியுமா?

இந்தியா - மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லி டெஸ்ட் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜெய்ஸ்வால் சதமெடுக்க சாய் சுதர்ஷன் 87 ரன்களுக்கு அவுட் ஆக, இந்தியா பெரிய ஸ்கோரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், 1948-ல் இதே டெல்லியில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய மே.இ.தீவுகள் அணியை நினைவுகூராமல் இருக்க முடியாது. அப்படி நினைவுகூர்வது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு வேதனைதானே தவிர இன்றைய மே.இ.தீவுகளை அடித்து நொறுக்கும் இந்திய அணியைக் கொண்டாடுவதாக அமையாது.

சுதந்திரம் பெற்ற பிறகான முதல் டெஸ்ட்டும் அந்த டெல்லி டெஸ்ட்தான். இன்றைய தினமான அக்டோபர் 10, ஆனால் 1948-ல் அந்த டெஸ்ட் தொடர் தொடங்கியது. அந்த மே.இ.தீவுகள் அணிக்கு கேப்டன் ஜான் கோடார்ட். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அது. அப்போதுதான் மே.இ.தீவுகளின் புகழ்பெற்ற, அருமைபெருமைக்குரிய Three W's என்று பிற்பாடு கொண்டாடப்பட்ட எவர்டன் வீக்ஸ், ஃபிராங்க் வொரல், கிளைட் வால்காட் கிரிக்கெட் உலகின் ஆர்வத்தைத் தூண்டினர்.

கிளைட் வால்காட் தன் 15 சதங்களில் முதல் சதத்தை இந்த டெல்லி டெஸ்ட் போட்டியில்தான் எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் லாலா அமர்நாத் டாசில் தோற்க மே.இ.தீவுகள் முதலில் பேட் செய்தது. வேகப்பந்து வீச்சாளர் ராஜகோபாலாச்சாரி ரங்காச்சாரி அற்புதமாக வீசியதாக வர்ணனைகள் தெரிவிக்கின்றன. மே.இ.தீவுகளின் ஆலன் ரே, ஜெஃப்ரி ஸ்டோல்மெயர் மற்றும் லெஜண்ட் ஜார்ஜ் ஹெட்லியை வீழ்த்த மே.இ.தீவுகள் 27/3 என்று தடுமாறியது. ஆனால் அதன் பிறகு வால்காட்டும், கேரி கோம்ஸும் நிலையாக ஆடி விக்கெட்டுகளைக் கொடுக்கவில்லை. முதல் நாள் ஆட்ட முடிவில் வால்காட் 152 நாட் அவுட். கோம்ஸ் 99 நாட் அவுட்.

மறுநாள் 152 ரன்களுக்கு வால்காட் ரன் அவுட் ஆக, பிறகு லாலா அமர்நாத் கோம்ஸை 101 ரன்களில் வீழ்த்தினார். ஆனால் எவர்டன் வீக்ஸ் 128 ரன்களை எடுக்க, ராபர்ட் கிறிஸ்டியானி 107 ரன்களை எடுக்க வெஸ்ட் இண்டீஸ் 631 ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்தது. ரங்காச்சாரி 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணியில் கே.சி. இப்ராஹிம், ருசி மோடி, லாலா அமர்நாத் அரைசதங்கள் அடித்தனர். லாலா அவுட் ஆன பிறகு ஹேமு அதிகாரி இறங்கினார். அவர் அற்புதமான ஒரு இன்னிங்சை ஆடி 114 ரன்கள் எடுத்தார். சந்து சர்வதே 37, விக்கெட் கீப்பர் கோகன் சென் 22 ரன்களை எடுக்க இந்தியா 454 ரன்களை எட்டியது, ஆனால் அப்போது 150 ரன்கள் பின் தங்கியிருந்தாலே பாலோ ஆன் கொடுக்கலாம். இந்தியா ஃபாலோ ஆன் ஆடியது, ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சினால் இந்தியாவை வீழ்த்த முடியவில்லை. 220/6 என்று இந்தியா போட்டியை டிரா செய்தது.

அந்தத் தொடர் மிக முக்கியமான தொடர். ஏனெனில் இந்திய அணி 1-0 என்றுதான் தோல்வி அடைந்தது. மோசமான தோல்வி என்று சொல்ல முடியாது, அதுவும் கடைசி டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்ற போது இந்திய அணிக்கு கடைசி இன்னிங்சில் வெற்றி இலக்கு 361 ரன்கள், ஆனால் இந்திய அணி 355/8 என்று விஜய் ஹஜாரேயின் 122 ரன்களுடன் நெருங்கி வந்து டிரா செய்தது, இதை வென்றிருந்தால் தொடர் 1-1 என்று சமன் ஆகியிருக்கும்.

இன்றைய வெஸ்ட் இண்டீஸைப் பார்க்கும்போது அன்றைய மே.இ.தீவுகளின் வீரர்களையும், அவர்களின் ஆதிக்கத்தையும் சவாலான டெஸ்ட் தொடர்களையும் மறக்கத்தான் முடியுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x