Published : 10 Oct 2025 01:22 PM
Last Updated : 10 Oct 2025 01:22 PM
மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று திறந்து வைத்தார்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. சர்வதேச போட்டிகளுக்கான தரத்தில் அமைக்கப்பட்டுள்ள மைதானம், இளம் விளையாட்டு வீரர்களுக்கான திறன்வள மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இங்கு சர்வதேச தர பிட்ச், இரவைப் பகலாக்கும் மின்விளக்குகள், வீரர்களுக்கான நவீன அறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, வலைப்பயிற்சிக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், மீடியா மற்றும் விஐபி கேலரிகள், பெரிய அளவிலான பார்வையாளர் இருக்கைகள் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மழையால் போட்டிகள் பாதிக்கப்படாத வகையில், மழை நின்ற 10 நிமிடங்களில் மைதானம் விளையாடுவதற்கேற்ப காய்ந்துவிடும் வகையில் நவீன வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,500 இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மைதான சுற்றுப் பகுதிகளை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய மைதானமாக அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நேற்று வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறந்து விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத்தளமாக இம்மைதானம் திகழும் என்றார்.
இதில் வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் பேசுகையில், வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி திறந்து வைத்துள்ளது பெருமையாக உள்ளது. திறமைக்கு தளம் அமைத்துத் தரும் எங்களது நோக்கத்தை இது மேலும் வலுப்படுத்தும், என்றார். இவ்விழாவில் வேலம்மாள் பள்ளிகளின் தாளாளர் வேல்மோகன், இயக்குநர் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.
‘மேக்கிங் சாம்பியன்ஸ்’ என்ற நோக்கத்தில் செயல்படும் வேலம்மாள் நிறுவனம் தற்போது விளையாட்டு உலகிலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. டிஎன்பிஎல், ஐபிஎல், ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தும் வகையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT