Published : 10 Oct 2025 11:07 AM
Last Updated : 10 Oct 2025 11:07 AM

‘நான் விளையாடத் தயாராகவே இருக்கிறேன்’ - ஆஸி. தொடருக்கு தேர்வாகாத ஷமி மனம் திறப்பு

முகமது ஷமி இல்லாமல் இந்திய அணியா என்ற நிலை மாறி கவுதம் கம்பீருக்கு பிறகே டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த வடிவத்திலும் கம்பீர் - அகார்க்கர் விவாதத்தில் கூட ஷமி இடம்பெறாமல் போயுள்ளார். சர்பராஸ் கான் கொஞ்சம் முகத்தைக் காட்டிவிட்டு ஒதுக்கப்பட்டார், ஷமி நீண்ட நாள் ஆடி விட்டு இப்போது ஒதுக்கப்படுகிறார். ஆனாலும் தான் ஆடத்தயார் நிலையில்தான் இருக்கிறேன் என்கிறார் ஷமி.

இந்திய அணித்தேர்வு கடும் விமர்சனங்களுக்குள்ளாகிறது, செய்தியாளர்கள் சந்திப்பில் அகார்கராகட்டும் கம்பீராகட்டும் ஏதோ தலையீடு இல்லை என்பது போல் காட்டிக் கொள்கின்றனர். பிரஸ் மீட்டில் சப்பைக்கட்டுக் காரணங்களை கேள்விக்குப் பதிலாகக் கூறுகிறார் அகார்கர். ஹர்ஷித் ராணா ஏன் திடீரென ஒருநாள், டி20 அணிக்குத் திரும்பினார் என்ற கேள்விக்கு இன்னும் கூட நியாயமான பதில் கிடைக்கவில்லை, அதனால்தான் ஸ்ரீகாந்த் சொல்லும் ‘கம்பீர் ஜால்ரா’ கருத்தை ஏற்க வேண்டியதாயிருக்கிறது.

இந்நிலையில், சமீப காலமாக பேச்சே அடிபடாத அளவுக்கு ஒதுக்கப்படும் முகமது ஷமி தன் தேர்வின்மை குறித்து யூடியூப் சேனலில் கூறியதாவது:

நான் அணியில் தேர்வு செய்யப்படுவதும் படாததும் என் கையில் இல்லை. தேர்வுக்குழு, கேப்டன் மற்றும் கோச் முடிவெடுக்க வேண்டும். எனக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்று அவர்கள் நினைத்தால் அது அவர்கள் கையில்தான் உள்ளது. ஆனால் நான் தயாராகவே இருக்கிறேன். என்னுடைய பயிற்சி நன்றாகவே போய்க்கொண்டிருக்கிறது.

என்னுடைய உடல்தகுதியும் நன்றாகவே உள்ளது. இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். இப்போது துலீப் டிராபி போட்டிகளில் ஆடிவிட்டு வந்தது போல். நான் சவுகரியமாகவே உணர்கிறேன். 35 ஓவர்கள் வீசினேன், நல்ல உடல் ஒத்துழைப்பும் பவுலிங் ரிதமும் இப்போது உள்ளது. எனவே உடல்தகுதி விஷயம் பிரச்சினையில்லை. நான் விளையாடத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அணித்தேர்வு என் கையில் இல்லை.

இவ்வாறு ஷமி கூறினார். சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளுடன் பெரிய அளவில் மீண்டெழுந்தார் ஷமி. ஆனால் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்தடுத்த ஆட்டங்களில் விக்கெட் இல்லை. அரை இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பைனலில் நியூஸிலாந்துக்கு எதிராக ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

ஷமி நிலைமை என்ன? அணியில் தேர்வு செய்யபப்டுவாரா மாட்டாரா? என அவருக்காகக் கேட்பவர்களும் இல்லை, அவருக்காகப் பேசுபவர்களும் இல்லை. அவர் கரியர் அவ்வளவுதானா என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அப்படி நடந்தால் அது மிகப்பெரிய தவறு என்பதை இப்போதே சுட்டிக்காட்ட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x