Published : 10 Oct 2025 09:39 AM
Last Updated : 10 Oct 2025 09:39 AM
சென்னை: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிக்கட்ட போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் மேற்கு வங்கம் - சத்தீஸ்கர் அணிகள் மோதின.
இதில் மேற்கு வங்க அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.
‘ஏ’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஒடிசா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி சார்பில் 10-வது நிமிடத்தில் பிரியதர்ஷினி கோல் அடித்தார். ஒடிசா அணி தரப்பில் 55-வது நிமிடத்தில் பியாரி ஸாக்ஸா கோல் அடித்தார்.
லீக் சுற்றின் முடிவில் தமிழ்நாடு அணி 4 ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளை பெற்று 2-வது இடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 13-ம் தேதி நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, மணிப்பூருடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அன்றைய தினம் நடைபெறும் மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்கம் - உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன. அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் 15-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT