Published : 09 Oct 2025 12:12 PM
Last Updated : 09 Oct 2025 12:12 PM
அகமதாபாத்தில் இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து மே.இ.தீவுகள் அணியை மீட்டெடுக்கவும் உயிர்ப்பிக்கவும் மீண்டும் சவாலான அணியாக உருமாற்றவும் குரல்கள் எழுந்து வருகின்றன.
கடுமையான நிதிச் சிக்கல்கள், அடிப்படை கட்டமைப்பு குறைகள், உலக கிரிக்கெட்டில் நிலவும் சமவெளியற்ற பொருளாதாரம், பிரஞ்சைஸ் கிரிக்கெட்டின் அழுத்தங்கள், மற்றும் இவை அனைத்தும் சேர்ந்து மேற்கிந்திய டெஸ்ட் அணிக்கு வரும் திறமையான வீரர்களின் பாதையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றிய கேள்விகள் எழுந்து வருகின்றன. இவையெல்லாம் மே.இ.தீவுகள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பி வருகின்றன.
இந்நிலையில் மே.இ.தீவுகளின் பயிற்சியாளரும் இரண்டு டி20 உலகக்கோப்பை வென்றவருமான டேரன் சாமி கூறும்போது, 1970 முதல் 1990 வரை மே.இ.தீவுகள் அணி ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் மே.இ.தீவுகள் அணி கிரிக்கெட் ஆட்டம் வளர்ச்சியடையவும் கிரிக்கெட் ஆட்டம் புகழ்பெறவும் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தது. ஆனால் அதற்கான நிதிசார் நன்மைகளை முழுதும் மே.இ.தீவுகள் வாரியமோ வீரர்களோ பெற்றுவிடவில்லை. அதாவது சமீப காலங்களில் இந்திய அணி கிரிக்கெட்டுக்கு அரும்பெரும் பங்களிப்புகளைச் செய்து வருகிறது, ஆனாலும் அது அதற்குரிய நிதியாதார நலன்களையும் சாதகங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது என்றார்.
“நன்றாக கவனியுங்கள், இது நாங்கள் கொண்டு வரும் வரலாறு, அல்லது நம்மிடையே உள்ள வரலாறு மேலும் அனைத்து வடிவங்களிலும் இந்த விளையாட்டில் நாங்கள் தடம் காட்டிய மரபுச்சுவடுகள். நாங்கள் இப்போது விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது, எல்லோரும் கடந்த காலம் நோக்கியே சாய்வார்கள். அதை ஒதுக்கி வைத்துவிட்டு, மேற்கிந்தியத் தீவுகள் அணி சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்துகொண்டால், நாங்கள் கேட்பதெல்லாம் எங்களுக்குத் தகுதியானதே.
நீங்கள் பல அணிகளைப் பற்றி பேசுகிறீர்கள். விவியன் ரிச்சர்ட்ஸ் அணி ஏற்படுத்திய தாக்கம், ஏன் இப்போது இந்தியாவில் இப்போதைய வீரர்கள் அடுத்தத் தலைமுறை வீரர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் பற்றிப் பேசுகிறீர்கள். வெஸ்ட் இண்டீஸ் இதிலெல்லாம் பங்களிப்புச் செய்துள்ளது. உலகம் முழுதும் இப்போது இந்தியா ஆடுவது போல் மே.இ.தீவுகள் அணி ஒருகாலத்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்தான் ஆடி வந்தது.
எல்லா நாடுகளும் இந்திய அணி தங்களுடன் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றனர் ஏனெனில் அதன் நிதிப் பயன்கள் மற்றும் சாதகப்பலன்களாலேயே. இதைத்தான் வெஸ்ட் இண்டீஸ் கடந்த காலத்தில் செய்தது. ஆனால் நாங்கள் அந்த நிதி வெகுமதிகளை இன்று வரை பெறவில்லை. நாங்கள் கடந்த காலத்தில் விளையாடிய போதெல்லாம் விளையாடும் நாடுகள் பயனடைந்தன.
இப்போது எங்களைச் சரிவிலிருந்து மீட்க நிதியாதாரங்கள் தேவை, நாங்கள் எங்களுக்குத் தகுதியுடையதைத்தான் கேட்கிறோம். கடைசியாக நாங்கள் இந்தியாவில் தொடரை வென்ற 1983-ம் ஆண்டு நான் பிறந்த ஆண்டு. அப்போது கிரேட் பிளேயர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். இப்போது சிஸ்டத்தை புற்றுநோய் தாக்கியிருக்கிறது. புற்றுநோயை அழிக்கவில்லை எனில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சரியான பாதையில் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.”. இவ்வாறு கூறினார் டேரன் சாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT