Published : 09 Oct 2025 08:24 AM
Last Updated : 09 Oct 2025 08:24 AM
பெர்த்: பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதுகு வலி காயத்தில் இருந்து அவர், இன்னும் முழுமையாக குணமடையாததே இதற்கு காரணம். சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகை தகவலின்படி பாட் கம்மின்ஸுக்கு கடந்த வாரம் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடையாதது தெரியவந்துள்ளது. இதனால் அவர், உடனடியாக பந்து வீசுவதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. முதல் போட்டியில் மட்டும் இல்லை ஆஷஸ் தொடர் முழுவதுமே கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதுதொடர்பாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி 20 தொடரில் கலந்து கொள்ளும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பாட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. ஆஷஸ் தொடரில் இருந்து பாட் கம்மின்ஸ் விலகினால் சீனியர் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் அணியை வழிநடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் இலங்கை டெஸ்ட் தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாடாத போது ஸ்மித் கேப்டனாக செயல்பட்டிருந்தார். ஸ்மித் 40 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி 23 வெற்றி, 10 தோல்வி, 7 டிராவை பதிவு செய்துள்ளது.
பாட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அணியில் சேர்க்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருக்கு உறுதுணையாக ஸ்காட் போலண்ட் செயல்படக்கூடும். இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்காட் போலண்ட் 20 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மெல்பர்னில் கடந்த 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்காட் போலண்ட் 7 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT