Published : 06 Oct 2025 11:44 AM
Last Updated : 06 Oct 2025 11:44 AM
ஒரு நாள் கிரேட் போட்டி ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஹர்ஜஸ் சிங் முச்சதம் விளாசினார். இதில் 35 சிக்சர்கள் அடங்கும். இவர் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்துள்ளார்.
இவரது இந்த முச்சதம் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் ஃபர்ஸ்ட் கிரேடு கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் மற்றும் ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். இவர் வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் அணிக்கு ஆடினார்.
இந்திய வம்சாவளி பெற்றோருக்கு சிட்னியில் பிறந்த ஹர்ஜாஸ் சிங், 2024 U-19 உலகக் கோப்பையில் சிறந்து விளங்கினார், இந்த இன்னிங்ஸ் குறித்து அவர் கூறும்போது பயிற்சி மற்றும் பவர்-ஹிட்டிங் தினசரி பிராக்டீஸ் ஆகியவையே காரணம் என்றார்.
சாதாரண கிரேடு லெவல் கிரிக்கெட் இவரது காட்டடியினால் பேட்டர்ன் பார்க் மைதானம் உயிர் பெற்றது. ஒருநாள் கிரேடு கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவருக்குச் சேர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டின் போக்கையே மாற்றிய வரலாற்று இன்னிங்ஸ் என்று இந்த இன்னிங்ஸை அங்கு விதந்தோதுகின்றனர். 1903 ஆம் ஆண்டு நியூசவுத் வேல்ஸ் பிரிமியர் முதல் கிரேடு கிரிக்கெட்டில் விக்டர் டிரம்ப்பர் என்ற வீரர் 335 ரன்களை எடுத்துள்ளார். 2007-ல் ஃபில் ஜாக் 321 ரன்களை எடுத்தார்.
இந்த இன்னிங்சில் நியூசவுத் வேல்ஸ் கிரேடு அணியின் ஸ்கோர் கார்டில் அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 37 என்றால் ஹர்ஜஸ் சிங்கின் ஆதிக்கம் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
2005-ம் ஆண்டில் சண்டிகாரில் பிறந்த ஹர்ஜஸ் சிங் வளர்ந்தது சிட்னியில். 2024 யு-19 உலகக்கோப்பையில் முதன் முதலாக இவர் பெயர் வெளியே தெரியத் தொடங்கியது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 55 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்ல காரணமாகத் திகழ்ந்தார் இந்த இந்திய வம்சாவளி வீரர் ஹர்ஜஸ் சிங்.
2023-ல் இங்கிலாந்துக்கு எதிராக யு-19 போட்டியில் சதம் விளாசினார். அப்போதே இவரது திறமை பளிச்சிட்டது. இந்த அதிரடி முச்சதத்தில் முதல் சதத்தை 74 பந்துகளில் விளாசினார் ஹர்ஜஸ் சிங். அதன் பிறகு அடித்த காட்டடியில் எத்தனை பந்துகள் தொலைந்தன என்று தெரியவில்லை. 67 பந்துகளை எதிர்கொண்டு 214 ரன்களை மேலும் சாத்தினார். டாம் முல்லன் என்னும் ஸ்பின்னர் பந்தை சிக்சருக்கு அனுப்பி முச்சதத்தை நிறைவு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT