Last Updated : 02 Oct, 2025 11:11 AM

1  

Published : 02 Oct 2025 11:11 AM
Last Updated : 02 Oct 2025 11:11 AM

‘பாக். அணியுடன் கைகுலுக்கல் இல்லை’ - இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பின்தொடரும் மகளிர் அணி | Women's WC

மும்பை: நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொண்டன. அந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். மேலும், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து ஆசிய கோப்பையைப் பெற முடியாது என இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு இந்த தொடரில் கோப்பை வழங்கப்படவில்லை.

இது சர்ச்சையான நிலையில் மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க மாட்டார்கள் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வந்துள்ள தகவல் உறுதி செய்துள்ளன. இந்த தொடருக்கான ஐசிசி விதியில் வீராங்கனைகள் கட்டாயம் கைகுலுக்க வேண்டிய அவசியமில்லை என்று வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணியின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது. கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் பொதுவான இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x