Last Updated : 29 Sep, 2025 08:26 PM

3  

Published : 29 Sep 2025 08:26 PM
Last Updated : 29 Sep 2025 08:26 PM

‘பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருப்பது எளிய காரியம் அல்ல” - பாக். கிரிக்கெட் ரசிகர்கள் விரக்தி

லாகூர்: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை அடுத்து அந்நாட்டு மக்கள் அந்த அணி மற்றும் அதன் வீரர்கள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள். பத்திரிகையாளர்கள், மக்கள் என பலரும் தங்கள் அணியை விமர்சித்துள்ளனர். இதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அரசாங்க ரீதியிலான அணுகல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியில் இந்த முறை அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பாபர் அஸம், முகமது ரிஸ்வான் உள்ளிட்டோர் இல்லாததும் இதற்கு காரணம். அதோடு இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. அந்த சூழலில் இருந்து மீண்டு வந்து இந்திய அணி வாகை சூடியது.

இந்தச் சூழலில் தங்கள் அணியின் தோல்வியை கண்டு கொதிப்படைந்த பாகிஸ்தான் ரசிகர்கள், தங்கள் அணியை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஏனெனில், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மட்டும் லீக், சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டியில் என இந்தியா உடனான மூன்று போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி உள்ளது.

‘பாகிஸ்தான் அணியின் ரசிகனாக இருப்பது எளிய காரியம் அல்ல’, ‘கடைசி ஓவர் வீச ஹாரிஸ் ரஃவூப் சரியான தேர்வு அல்ல. அவர் கடைசி ஓவர் வீசினால் நமக்கு தோல்வி உறுதி’, ‘சல்மான் அலி ஆகா எப்படி கேப்டன் ஆனார் என்று தெரியவில்லை. அவரால் பேட்டிங் உட்பட எதுவும் செய்ய முடியாது’, ‘இந்திய அணி இந்த பாலகர்களுடன் விளையாட கூடாது’, ‘ஆட்டத்தை இழந்தபோதும் கோப்பையை தூக்கி வந்து விட்டார் மோசின் நக்வி. ஆபரேஷன் சிந்தூரிலும் பாகிஸ்தானுக்கு இதே தான் நடந்தது’, ‘ஆசிய கோப்பை தொடரில் ஒரு ஞாயிறு கூட பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை’ என ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x