Published : 27 Sep 2025 12:04 PM
Last Updated : 27 Sep 2025 12:04 PM

சூப்பர் ஓவரில் ஷனகாவுக்கு ரன் அவுட் கொடுக்காதது ஏன்? - சந்தேகங்களும் விளக்கமும்!

நடப்பு ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான போட்டி பரபரப்பான முறையில் ஸ்கோர்கள் சமன் ஆக சூப்பர் ஓவர் வரை சென்றது, இதில் அர்ஷ்தீப் சிங்கின் அட்டகாசமான பந்து வீச்சினால் இந்தியா அபார வெற்றி பெற்று தோற்காத அணியாக இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

துபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் பலருக்கும் சந்தேகங்களையும் கேள்வியையும் எழுப்பிய சம்பவம் சூப்பர் ஓவரில் ஷனகா ரன் அவுட் என்று தெரிந்தும் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்பதே.

சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை பேட் செய்தது, ஏனோ சத நாயகன் அதிரடி பதுன் நிஷாங்காவை இறக்காமல் இருந்தனர் என்பது புரியாத புதிர். ஷனகா 4-வது பந்தில் சஞ்சு சாம்சன் த்ரோவுக்கு கிளியராக ரன் அவுட் ஆனார். அர்ஷ்தீப் சிங் வீசிய யார்க்கர் லெந்த் பந்தை மிஸ் செய்த ஷனகா கிரீசைத் தாண்டி வந்தார். சஞ்சு அவரை ரன் அவுட் செய்தார். ஆனால் அர்ஷ்தீப் சிங்கோ விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்ததாக முறையீடு எழுப்பினார். ஆனால் சஞ்சு சாம்சனோ ரன் அவுட் செய்கிறார். இதில் எது அவுட்? ரன் அவுட் என்பது தெள்ளத் தெளிவானது, இருந்தும் நடுவர் ஏன் கொடுக்கவில்லை என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

நடுவர் ஷனகாவை விக்கெட் கீப்பர் கேட்ச் எடுத்த அடிப்படையில் அவுட் கொடுத்தார். இதைக் கொடுக்க அவர் கொஞ்சம் டைம் எடுத்துக் கொண்டார். ஆனால், ஷனகா குழப்பத்தை அதிகரிக்குமாறு தேர்ட் அம்பயரிடம் முறையிட்டார். ரீப்ளேயில் தெரிந்த படி ஷனகாவின் மட்டைக்கும் பந்துக்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்தது.

ஆகவே ஷனகா ‘காட் பிஹைண்ட்’ அவுட் இல்லை என்று முடிவானது. அப்படியென்றால் கிரீசை விட்டு வெளியே வந்ததன் அடிப்படையில் சஞ்சு சாம்சன் த்ரோ ஸ்டம்பை அடித்த போது அது ரன் அவுட் தானே என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம், ஏனெனில் நடுவர் ரன் அவுட்டும் கிடையாது என்று தீர்ப்பளித்தார். இதனால் இன்னும் குழப்பம் அதிகரித்தது.

பிரச்சினை என்னவெனில் சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்த பிறகு அர்ஷ்தீப் சிங்கின் கேட்ச் அப்பீலுக்கு நடுவர் சற்றே தாமதமாக அவுட் கொடுத்ததுதான். எம்.சி.சி விதிமுறை கூறுவது என்னவெனில், “அவுட் ஆன நிகழ்வுக்குப் பிறகே பந்து டெட் ஆகிவிடும்” என்பதே. இந்தச் சந்தர்ப்பத்தில் விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்ததாக எழுந்த அப்பீல். நடுவரும் அவுட் என்று தீர்ப்பளிக்கிறார்.

அப்படியென்றால் சஞ்சு சாம்சன் ரன் அவுட் செய்யும் போது பந்து டெட் பந்தாகி விடுகிறது. ஆனால், ஷனகாவின் மட்டையில் பந்து படவில்லை, எனவே கேட்ச் தீர்ப்பு தவறு என்றாலும் பந்து டெட் பால் ஆனது ஆனதுதான், அதை மாற்ற முடியாது எனவே ரன் அவுட்டும் கிடையாது.

சனத் ஜெயசூர்யா இதற்கு விளக்கம் அளிக்கும் போது, “காட் பிஹைண்ட்டிற்கு களநடுவர் அவுட் கொடுத்து விட்டார். அதன் பிறகு ஷனகா ரிவியூ செய்கிறார், இது பிரச்சினையல்ல, ஆனால் ஒரு அவுட் முதலில் களநடுவர் கொடுத்து விடுகிறார். ஒரே பந்துக்கு 2 அவுட் கொடுக்க முடியாது என்பதுதான் அது” என்றார்.

ஆனால், ஷனகா அடுத்த அர்ஷ்தீப் பந்திலேயே டீப் பாயிண்டில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இலங்கை தோற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x