Published : 26 Sep 2025 08:38 PM
Last Updated : 26 Sep 2025 08:38 PM
துபாய்: பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த காரணத்துக்காக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு 30 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் பாகிஸ்தான் அணி உடனான லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார். அவரது கருத்து அரசியல் ரீதியானது என ஐசிசி வசம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் கொடுத்தது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணையை ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ ரிச்சி ரிச்சர்ட்சன் நடத்தினார். தன் மீதான குற்றச்சாட்டை சூர்யகுமார் யாதவ் மறுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஆட்டத்துக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. மேலும், இந்த தொடரில் இனி அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படுத்த வேண்டாம் என அவரிடம் கூறியுள்ளதாகவும் தகவல். இதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐசிசி வசம் முறையிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் என்ன சொன்னார்? - “நாங்கள் அரசாங்கத்துடனும் பிசிசிஐயுடனும் இணைந்துள்ளோம். அணியாக நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம். அவர்களுக்கு பதில் அளித்திருக்கிறோம். இது ஒரு சிறந்த உணர்வு. நாட்டுக்கு சிறந்த முறையில் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கொடுத்துள்ளோம்.
ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கையில் ஒருசில விஷயங்களை விளையாட்டு மரபைவிட முதன்மையானதாகக் கருத வேண்டும். பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். இந்த போட்டியின் வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என பாகிஸ்தான் அணி உடனான லீக் ஆட்டத்துக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணி உடன் லீக் மட்டம் சூப்பர் 4 சுற்று என இரண்டு போட்டிகளில் இந்திய அணி விளையாடி உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT