Last Updated : 23 Sep, 2025 09:32 AM

 

Published : 23 Sep 2025 09:32 AM
Last Updated : 23 Sep 2025 09:32 AM

சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருதை வென்றார் பிரான்ஸின் டெம்பெல்லே!

பாரிஸ்: நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். 2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக சிறந்த பங்களிப்பை அவர் வழங்கினார். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது.

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d'Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஏனெனில், இந்த முறை மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரெஞ்சு இதழான ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

அந்த வகையில் இம்முறை பிரான்ஸின் டெம்பெல்லே, துவே, எம்பாப்பே, இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்கம், ஹாரி கேன், மொரோக்கோவின் ஹக்கிமி, போலந்தின் லெவான்டோவ்ஸ்கி, நார்வே நாட்டின் எர்லிங் ஹாலண்ட், அர்ஜெண்டினாவின் மார்ட்டினஸ், போர்ச்சுகலின் நுனோ மெண்டிஸ், ஜோவை நுவஸ், விதன்ஹா, பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர், ஸ்பெயினின் யமால், பேபியன் ருய்ஸ் மற்றும் எகிப்து நாட்டின் முகமது சாலா ஆகியோர் பரிந்துரையில் இடம்பெற்றனர்.

விருது வழங்கும் விழாவில் 18 வயதான இளம் வீரர் யமாலும் பங்கேற்றிந்தார். கடந்த சீசனில் கால்பந்து களத்தில் அதிகம் ஈர்க்கப்பட்ட வீரர்களில் ஒருவராக அவர் இருந்தார். இந்நிலையில், இந்த முறை Ballon d’Or விருதை டெம்பெல்லே வென்றதாக அறிவிக்கப்பட்டார். அதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து விருதை பெற்றுக் கொண்ட டெம்பெல்லே, தன் நன்றியை தெரிவித்தார்.

28 வயதான டெம்பெல்லே, பிஎஸ்ஜி அணிக்காக 2024-25 சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரெஞ்சு நாட்டு கிளப் அணிக்காக 53 போட்டிகளில் 35 கோல்களை அவர் கடந்த சீசனில் பதிவு செய்துள்ளார். சக அணி வீரர்கள் கோல் பதிவு செய்ய 16 முறை உதவி உள்ளார். பிஎஸ்ஜி அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றிருந்தது. அதோடு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான Ballon d’Or விருதை ஸ்பெயினின் அடனா பொன்மதி வென்றார். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அவர் விருது பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x