Last Updated : 22 Sep, 2025 11:17 AM

 

Published : 22 Sep 2025 11:17 AM
Last Updated : 22 Sep 2025 11:17 AM

வம்புக்கு வந்த பாக். பவுலர்கள்: அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா - IND vs PAK மேட்ச் ஹைலைட்ஸ்

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் அபார தொடக்கம் கொடுத்தனர். அதிலும் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் அதிரடி அற்புத ரகம்.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபர்ஹான் 58, சயிம் அயூப் 21, முகமது நவாஸ் 21, பஹீம் அஷ்ரப் 8 பந்துகளில் 20 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பந்து வீசிய துபே 2 விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் மற்றும் குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நவாஸ் ரன் அவுட் ஆனார். பும்ரா, 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை கொடுத்தார். இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது 4 கேட்ச்களை நழுவ விட்டது.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கில், 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அபிஷேக் அதிரடி: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்த போதும் அபிஷேக் சர்மா தனது அதிரடி பாணி ஆட்டத்தை தொடர்ந்தார். 39 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 189.74. சஞ்சு சாம்சன், 13 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 30, ஹர்திக் 7 ரன்கள் உடன் களத்தில் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை அபிஷேக் சர்மா வென்றார்.

இந்திய அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடுகிறது.

வம்புக்கு வந்த பாகிஸ்தான் பவுலர்கள்: இந்திய அணியின் ஓப்பனர்கள் அபிஷேக் மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் சிறந்த தொடக்கம் கொடுக்க பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் கண்டனர். அதன் வெளிப்பாடாக அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ஹரிஸ் ரவூப் மற்றும் ஷாஹின் ஷா அப்ரிடி ஆகியோர் அபிஷேக் மற்றும் ஷுப்மன் உடன் பஞ்சாபி மொழியில் பேசி வம்பிழுத்தனர். ஆட்டத்துக்கு நடுவே நடுவர் தலையிட்டு அவர்களை விலக்கி விட்டார்.

அபிஷேக் மற்றும் ஷுப்மன் கில் என இருவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் இணைந்து அதிகம் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆட்டம் தான் பேசும்; பேச்சல்ல’ என கில்லும், ‘நீங்கள் பேசுங்கள்; நாங்கள் வெல்கிறோம்’ என அபிஷேக்கும் ஆட்டத்துக்கு பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x