Published : 21 Sep 2025 08:54 AM
Last Updated : 21 Sep 2025 08:54 AM
புதுடெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பெத் மூனி 75 பந்துகளில், ஒரு சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் விளாசினார். ஜார்ஜியா வோல் 68 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 81 ரன்களும், எலிஸ் பெர்ரி 72 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் சேர்த்தனர்.
413 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா அதிரடி தொடக்கம் கொடுத்தார். மட்டையை சுழற்றிய அவர், 50 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 2-வது வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்திய வீராங்கனைகளில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார் மந்தனா. இதற்கு முன்னர் அவர், 70 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இந்த வகை சாதனையில் உலக அரங்கில் ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் முதலிடத்தில் உள்ளார். அவர், கடந்த 2012-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக 45 பந்துகளில் சதம் விளாசியிருந்தார்.
அதிரடியாக விளையாடிய மந்தனா 63 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 125 ரன்கள் விளாசிய நிலையில் கிரேஸ் ஹாரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் கிம் கார்த் பந்தில் வெளியேறினார்.
289 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் தீப்தி சர்மா போராடினார். வெற்றிக்கு மேற்கொண்டு 46 பந்துகளில் 59 ரன்கள் தேவை என்ற நிலையில் மெக் கார்த் பந்தில் தீப்தி சர்மா ஆட்டமிழந்தார். அவர், 58 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்தார். இதன் பின்னர் ஸ்நே ராணா 35, ரேணுகா சிங் 2 ரன்களில் வெளியேற 47 ஓவர்களில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய மகளிர் அணி.
43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. அத்துடன் இந்திய மகளிர் அணிக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடரை இழக்காத பெருமையையும் தக்கவைத்துக் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT