Published : 20 Sep 2025 07:06 AM
Last Updated : 20 Sep 2025 07:06 AM
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேசம் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இரவு 8 மணிக்கு துபாயில் மோதுகின்றன.
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது தனது பிரிவில் முதலிடம் பிடித்து இருந்தது. வங்கதேச அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஹாங் காங் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்து இருந்தது.
எனினும் இலங்கை அணியினர் சரிவைச் சந்திக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். கடந்த திங்களன்று ஹாங் காங் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஸ்ஸங்காவின் அரைசதத்திற்குப் பிறகு, அந்த கிட்டத்தட்ட தோல்வியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். வனிந்து ஹசரங்கா இறுதிக்கட்டத்தில் தனது அதிரடியால் வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.
நடுவரிசை பேட்டிங் பலவீனமாக காணப்படுவது அணியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. கேப்டன் சரித் அசலங்கா, மூத்த வீரர்களான குசல் பெரேரா, தசன் ஷனகா ஆகியோர் நடுவரிசையில் பொறுப்பை உணர்ந்து பேட் செய்தால் அணியின் பலம் அதிகரிக்கும்.
தொடக்க வீரரான பதும் நிஷங்கா நடப்பு தொடரில் 2 அரை சதங்களுடன் 124 ரன்கள் சேர்த்துள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பேட்டிங் வெளிப்படக்கூடும்.
முதல் இரு ஆட்டங்களிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறிய குஷால் மெண்டிஸ், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 74 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். இடது கை பேட்ஸ்மேனான கமில்
மிஷராவும் ஓரளவு ரன்கள் சேர்த்து வருகிறார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி 3 ஆட்டங்களிலுமே இலக்கை துரத்தியே வெற்றி கண்டுள்ளது. இதனால் அந்த அணி டாஸை வெல்லும் பட்சத்தில் பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. பந்து வீச்சில் நூவன் துஷாரா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் தொடக்க ஓவர்களிலும், வனிந்து ஹசரங்கா, அசலங்கா, தசன் ஷனகா ஆகியோர் நடு ஓவர்களிலும் பலம் சேர்க்கக்கூடும்.
இதற்கிடையே இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான துனித் வெல்லலகே அவசரமாக தாயகம் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது தந்தை சுரங்கா மரணம் அடைந்ததை தொடர்ந்து இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக துனித் வெல்லலகே நேற்றுமுன்தினம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்தவுடன் உடனடியாக கொழும்பு புறப்பட்டுச் சென்றார். இதனால் அவர், தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவாரா என்பது சந்தேகமாகி உள்ளது.
வங்கதேச அணியானது சூப்பர் 4 சுற்று வாய்ப்பை இலங்கை அணியின் தயவால் பெற்றது. இலங்கை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதன் காரணமாகவே வங்கதேச அணி சூப்பர் சுற்றில் நுழைந்தது. ஒருவேளை இலங்கை அணி, ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்திருந்தால் வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறி இருக்கும்.
வங்கதேச அணி லீக் சுற்றில் ஹாங் காங் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் இலங்கை அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனினும் இதில் இருந்து மீண்டு வந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் லிட்டன் தாஸ், சைப் ஹசன், தன்ஸித் ஹசன், தவுஹித் ஹிர்தோய் ஆகியோர் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT