Published : 18 Sep 2025 04:23 AM
Last Updated : 18 Sep 2025 04:23 AM
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 84.85 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். நேரடியாக தகுதி பெறுவதற்கு 84.50 மீட்டர் போதுமானதாகும்.
தகுதி சுற்றில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் மொத்தம் 37 வீரர்கள் பங்கேற்றனர். 84.50 மீட்டர் தூரம் ஈட்டியை எறிபவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் எனவும், இல்லையென்றால் அதிக தூரம் ஈட்டியை எறிந்த 12 பேர் இறுதிப் போட்டிக்குள் நுழைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 27 வயதான நீரஜ் சோப்ரா ‘ஏ’ பிரிவில் முதல் நபராக 84.85 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
கிரனடாவின் பீட்டர்ஸ் ஆண்டர்சன் (89.53 மீட்டர்), ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.21), கென்யாவின் யேகோ ஜூலியஸ் (85.96), போலந்தின் வெக்னர்டேவிட் (85.67), ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (85.28), அமெரிக்காவின் தாம்ப்சன் கர்திஸ் (84.72), செக் குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் (84.11), இந்தியாவின் சச்சின் யாதவ் (83.67), ஆஸ்திரேலியாவின் கேமரூன் மெசென்டைர் (83.03), இலங்கையின் ருமேஷ் தரங்கா பதிரகே (82.80) ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT