Published : 16 Sep 2025 04:33 PM
Last Updated : 16 Sep 2025 04:33 PM
போலிச் செய்திகளின் சதி வலைப்பின்னலின் சர்ச்சையின் மையக் கதாபாத்திரமாகி, பிறகு அந்தச் செய்திகளைக் கடுமையாகக் கண்டித்து மீண்டு வந்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் லெஜண்ட் ரிக்கி பான்டிங்.
என்ன நடந்தது? - இந்தியா - பாகிஸ்தான் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் போட்டி முடிந்தவுடன் பரஸ்பர கைகுலுக்கல் சடங்கைப் புறக்கணித்தது முரண்பட்ட எதிர்வினைகளை இரு நாட்டு ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி வரும் நிலையில், இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தது பற்றிய போலிச் செய்தி ஒன்று ரிக்கி பான்டிங் கூறியதாக எக்ஸ் வலைத்தளத்தில் பரவியது. இதனையடுத்து பான்டிங் நெட்டிசன்களின் வசை வலையில் சிக்கினார்.
ரிக்கி பான்டிங் மீது கடும் விமர்சனங்கள் குவிய ஆரம்பித்தன. அப்படி என்னதான் பான்டிங் கூறியதாக வெளியான போலி மேற்கோள் கூறிற்று?
“இந்தப் போட்டி என்றென்றும் இந்தியாதான் இங்கே பெரிய தோல்வியாளர் என்றே நினைவில் இருக்கும்” என்பதே பான்டிங் கூறியதாக வெளியான போலிச் செய்தி.
உண்மையில், பாண்டிங் இதுபோன்ற எந்தவொரு கருத்தையும் கூறவில்லை என்றும், இந்தப் போலி மேற்கோள் முற்றிலும் கற்பனையாகப் புனையப்பட்டக் கட்டுக்கதையே என்பது உறுதியாகியுள்ளது.
ரிக்கி பான்டிங் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் கூறியதாக போலியாக உருவாக்கப்பட்ட அந்த வாசகத்தில், “இந்திய அணியுடன் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க வேண்டும் என்று விரும்பிய விதம் ஜெண்டில்மென்களின் ஆட்டமாகிய இதில் பாகிஸ்தானை சாம்பியன்களாக அழியாப் புகழுக்கு இட்டுச் செல்ல இந்திய வீரர்களை நிரந்தர இழப்பாளர்களாக்கிவிட்டது” என்று கூறபட்டது.
இதனையடுத்து பான்டிங் மீது கடுமையான வசைகளும் இழிவுபடுத்தல்களும் பதிவு செய்யப்பட, ரிக்கி பான்டிங் இதனை மறுத்துக் கூறும்போது, “சமூக வலைத்தளத்தில் நான் கூறியதாக வெளியான செய்திகள் பற்றி அறிவேன். தயவுகூர்ந்து தெரிந்து கொள்ளுங்கள், நான் நிச்சயமாக, உறுதியாக அதுபோன்று எதுவும் கூறவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆசியக் கோப்பை பற்றி நான் எந்தவித கருத்தையுமே பொதுவில் கூறவே இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.
செய்யாத தவறுக்கு, பேசாத பேச்சுக்கு ரிக்கி பான்டிங் அகப்பட்டுக் கொண்டார், இப்போது அந்தச் செய்தி அவதூறுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT