Last Updated : 14 Sep, 2025 03:14 PM

1  

Published : 14 Sep 2025 03:14 PM
Last Updated : 14 Sep 2025 03:14 PM

பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும் - கபில் தேவ்

புதுடெல்லி: "பிள்ளைகள் தேசத்துக்காக கிரிக்கெட் விளையாட வேண்டுமென பெற்றோர்கள் விரும்ப வேண்டும். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமென எண்ணுவதுதான் எனக்கு கோபம் வருகிறது" என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் PlayCom 2025 நிகழ்வில் சனிக்கிழமை அன்று கபில் தேவ் பங்கேற்றார். அப்போது அவர் இதனை தெரிவித்தார். டி20 கிரிக்கெட் லீக், தோனி - ரோஹித் ஒப்பீடு குறித்தும் அவர் பேசியுள்ளார்.

“இப்போதுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கிறார்கள். ஆனால், எங்கள் பால்ய காலத்தில் அப்படி அல்ல. கிரிக்கெட் விளையாடினால் பெற்றோர்கள் உதைப்பார்கள்.

இப்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கிரிக்கெட் விளையாட மைதானத்துக்கு அழைத்து வருகின்றனர். அதை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் தேசத்துக்காக விளையாட வேண்டுமென அவர்கள் விரும்ப வேண்டும். ஆனால், ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினால் போதுமென எண்ணுவதுதான் எனக்கு கோபத்தையும், எரிச்சலையும் தருகிறது. தேசத்துக்காக விளையாட வேண்டுமென குறிக்கோள் இருக்க வேண்டும். கிளப் அணிக்காக விளையாடினாலும் தேசத்துக்காக விளையாடுவதுதான் அல்டிமேட்.

நாங்கள் விளையாடும்போது 50 ஓவர்களில் 100 ரன் எட்டவே தடுமாறுவோம். ஆனால், இப்போது இப்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களை அணிகள் எட்டுவதை பார்க்கும் போது சிறப்பாக உள்ளது. அதனால் இந்த தலைமுறையை சேர்ந்த வீரர்களை நாம் பாராட்ட வேண்டும்.

ஓய்வு பெற்ற வீரர்கள் பிற ஃப்ரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவதில் தவறு கிடையாது. அது அவர்களது தனிப்பட்ட முடிவு. அதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் இந்திய அணிக்காக விளையாடி தங்களை நிரூபித்தவர்கள்” என்றார்.

அவரிடம் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து ஒப்பிடுமாறு கேட்கப்பட்டது. அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர்கள். இந்திய அணிக்காக தோனி 2007-லும், ரோஹித் 2024-லும் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தனர். தோனி தலைமையிலான இந்திய 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியும் வென்றுள்ளது. ரோஹித் சர்மாவும் இந்திய அணிக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை கேப்டனாக வென்று கொடுத்துள்ளார்.

“தோனி மிகச் சிறந்தவர். அவரால் பல்வேறு விஷயங்களை சிறப்பாக மதிப்பிட முடியும். எந்தவொரு வீரரும் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய முடியும். ஆனால், அவர் விக்கெட் கீப்பர் என்பதால் ஒவ்வொரு பந்தையும் கவனிக்க வேண்டும். ஆட்ட சூழலையும் சிறப்பாக அறிய முடியும். அவருக்கு என்ன செய்கிறோம் என்பது தெரியும். அணியை இறுதி வரை இட்டுச் செல்லும் திறன் அவரிடம் உள்ளதாக நான் கருதுகிறேன்” என கபில் தேவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x