Published : 13 Sep 2025 08:07 AM
Last Updated : 13 Sep 2025 08:07 AM
அபுதாபி: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேசம் தனது 2-வது ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான இலங்கையுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. வங்கதேச அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங் காங் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்த ஆட்டத்தில் 145 ரன்கள் இலக்கை துரத்திய வங்கதேச அணி 14 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. கேப்டன் லிட்டன் தாஸ் 39 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய தவூஹித் ஹிர்டோய் 35 ரன்கள் எடுத்து பலம் சேர்த்திருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
பந்து வீச்சில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்த போதிலும் கூட்டாக 8 ஓவர்களை வீசி 59 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தனர். இன்றைய ஆட்டத்தில் இவர்கள் கூடுதல் முனைப்புடன் செயல்படக்கூடும். இவர்களுக்கு முஸ்டாபிஸூர் ரஹ்மான் உறுதுணையாக இருக்கக்கூடும்.
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி வலுவான டாப் ஆர்டர், அதிரடியாக விளையாடக்கூடிய நடுவரிசை பேட்டிங்குடன் ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களுக்கு தகுந்த வகையிலான சுழற்பந்து வீச்சையும் கொண்டதாக உள்ளது. அந்த அணிக்கு இது முதல் ஆட்டம் ஆகும். பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரைரா ஆகியோர் டாப் ஆர்டரிலும், சரித் அசலங்கா, தசன் சனகா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் நடுவரிசையிலும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள்.
3 வருடங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள ஜனித் லியனகேவும் பேட்டிங்கில் பலம் சேர்க்கக்கூடும். 30 வயதான அவர், சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் விளாசியிருந்தார்.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக சனகா, சமிகா கருணரத்னே ஆகியேர் பலம் சேர்க்கக்கூடும். சுழலில் வனிந்து ஹசரங்கா, தீக் ஷனா, துனித் வெல்லாலகே ஆகியோர் வங்கதேச பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரனா நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT