Published : 10 Sep 2025 06:11 PM
Last Updated : 10 Sep 2025 06:11 PM
ஆசியக் கோப்பை டி20 போட்டிகள் யு.ஏ.இ.-யில் தொடங்கியது. அடுத்தடுத்து போட்டிகளை வைத்துக் கொண்டேயிருந்தால் எப்படி ஆட முடியும். உடல் தகுதியைப் பரமாரிக்க வேண்டாமா என்று இலங்கை கேப்டன் அசலங்காவும், ஆப்கன் கேப்டன் ரஷீத் கானும் லேசாக விமர்சனம் செய்துள்ளனர்.
அசலங்கா ஜிம்பாப்வே தொடரை முடித்துக் கொண்டு நேராக இங்கு வந்துள்ளார். இதனையடுத்து ‘நான் தூங்கி வழிகிறேன், நாளை உங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன்’ என்று செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார். “அடுத்தடுத்து போட்டிகளில் ஆடுவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதுவும் பயணம் கடினம். இரண்டு நாட்களாவது ஓய்வு வேண்டும். கோச் ஓய்வு கொடுப்பார் என்று நினைக்கிறோம்.
நாங்கள் எங்கள் உடல்நிலையையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. நம் எல்லோருக்கும் தெரியும் துபாய், அபுதாபியெல்லாம் மிகவும் வெப்பம். முதல் போட்டிக்கு புத்துணர்வுடன் இருந்து 100% பங்களிப்பு செய்வதும் அவசியம்” என்றார். ஆனால், இலங்கை தன் முதல் போட்டியை வங்கதேசத்துடன் ஆடுவதற்கு முன் 4 நாட்கள் இடைவெளி உள்ளது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஒரு பிரிவில் உள்ளன.
ஆப்கானிஸ்தான் அணியும் இப்போதுதான் கடும் நெருக்கடியான முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇயுடன் ஆடிவிட்டு வருகிறது. இது முடிந்த 48 மணி நேர இடைவெளிக்குள்ளாகவே நேற்று யு.ஏ.இ.யுடன் ஆடி வென்றுள்ளது. அதுவும் ரஷீத் கானும் எதிரணி வீரர் யாசிர் முர்டசாவும் டாஸுக்கு 6 மணி நேரம் முன்னதாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்தனர்.
“நிச்சயம் இப்படி ஷெட்யூல் செய்வது சரியல்ல. மற்ற கேப்டன்களிடமும் இதைப் பற்றித்தான் பேசி விட்டு வந்தோம். அபுதாபியில் அனைத்து 3 போட்டிகளிலும் ஆடுவதற்கு துபாயில் தங்க வேண்டியிருக்கிறதே. என்ன செய்வது இதையெல்லாமும் தொழில் முறை கிரிக்கெட் வீரர்களாக பொறுத்துப் போக வேண்டியதுதான்.
மைதானத்துக்குள் நுழைந்து விட்டால் அனைத்தும் மறந்து விடும். மற்ற நாடுகளிலும் நாங்கள் ஆட்டத்திற்கு 2-3 மணி நேரம் முன்னதாக நேராக மைதானத்துக்குத்தான் செல்கிறோம். ஒருமுறை வங்கதேசத்திலிருந்து அமெரிக்காவுக்கு நேரே சென்ற கையோடு போட்டியில் ஆடினோம்.
நேரடியாக ஆடுவதற்கு எப்போதும் தயாராக இருப்போம், அதனால்தா நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள். எனவே இதைப் பற்றியெல்லாம் புகார் பத்திரிக்கை வாசித்தோமானால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியாது” என்று சமாதானம் செய்து கொண்டார் ரஷீத் கான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT