Published : 09 Sep 2025 12:15 PM
Last Updated : 09 Sep 2025 12:15 PM
2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசன் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட்டும் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில் காரணமில்லாமல் ஒதுக்கப்பட்ட சர்பராஸ் கானை மீண்டும் இந்திய அணியில் எடுங்கள் என்று ‘யுனிவர்ஸ் பாஸ்’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் கிறிஸ் கெய்ல் பரிந்துரைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் சர்பராஸ் கானை 5 போட்டிகளிலும் பெஞ்சி அமர வைத்து ரசித்தார் கவுதம் கம்பீர். எங்கிருந்தோ தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரெல் எல்லாம் வாய்ப்புப் பெற்ற போது நல்ல எதிர்காலமிக்க டெஸ்ட் வீரரான சர்பராஸ் கானை ஒழிப்பதில் கிரிக்கெட் அல்லாத புறக்காரணங்கள், அதாவது அவரது உடல் எடை ஒரு சாக்காக முன் வைக்கப்பட்டு அவரை அணியில் எடுக்காமல் தவிர்த்து வந்தனர். ஆனால் உடல் எடை என்பது ஒரு முகமூடிதான் உள்ளுக்குள்ளே பலதரப்பட்ட காரணங்கள், அரசியல் இருக்கலாம் என்று பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர். இப்போதெல்லாம் சர்பராஸ் கான் பற்றி விவாதங்களே கூட எழுவதில்லை.
சரி, இந்தியா ஏ அணிக்காக இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்து விட்டு ஆசை காட்டி மோசம் செய்தனர். சாய் சுதர்ஷனை ஐபிஎல் பார்மை வைத்துத் தேர்வு செய்தனர். கருண் நாயரின் டெக்னிக் சந்தேகத்திற்கிடமாக இருந்த போதிலும் அவரைத் தேர்வு செய்து கரிபூசிக் கொண்டனர். இங்கிலாந்து தொடர் 2-2 என்று சமன் ஆனது இவர்கள் செய்த செலக்ஷன் கூத்துக்களுக்கெல்லாம் ஒரு நியாயம் கற்பித்து விட்டது.
ஆனால் உண்மையில் இந்தியப் பிட்ச்களில் இப்போது சாய் சுதர்ஷன், கருண் நாயருக்கு வாய்ப்புக் கிடைக்காது, இப்போது ஸ்ரேயஸ் அய்யர் வருவார், அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, மீண்டும் சர்பராஸ் கான் ஒழிக்கப்படுவார் என்பதும் தெரிந்ததே. அவரும் தன் ‘முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதாள விக்ரமாதித்யன்’ போல் முயன்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன் ஐபிஎல் சகாவுக்காக கிறிஸ் கெய்ல் வாதாடியுள்ளார்.
“சர்பராஸ் கான் டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும், குறைந்தபட்சம் டெஸ்ட் அணியிலாவது அவர் கட்டாயம் இடம்பெற வேண்டும். நியூஸிலாந்துக்கு எதிராக சதம் எடுத்தவர் அணியில் இல்லை. நான் இரண்டொரு நாட்களுக்கு முன்னதாக ஒரு பதிவொன்றைப் பார்த்தேன், அதாவது சர்பராஸ் கான் உடல் எடையைக் குறைத்து விட்டார் என்று..
ஆனால் உடல் எடையெல்லாம் ஒரு பிரச்சனையா, அவரைப் பொறுத்தவரை அவருக்கு அது சரியாகத்தான் இருந்தது, உடல் எடையில் தவறில்லை. அவர் நல்ல வடிவத்தில்தான் உள்ளார். இன்னும் ரன்களைக் குவிக்கிறார்.
அவர் முதல் தரக் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசியுள்ளார். இப்படிப்பட்ட வீரருக்கு எதிராக உடல் எடை என்று ஒரு சப்பையான காரணத்தைப் பயன்படுத்துகின்றனர். மிகவும் பரிதாபம். நிச்சயம் அவருக்கு எதிராக இந்த உடல் எடை காரணத்தைப் பயன்படுத்தவே கூடாது. இளம் சர்பராஸ் 100% அணியில் இருக்க வேண்டும். இந்தியாவில் நிறைய திறமைகள் இருக்கிறது... இவருக்கும் தன் திறமையை நிரூபிக்க தொடர் வாய்ப்பு அளியுங்கள்.” கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இப்போது இந்தியா ஏ அணியிலிருந்தும் சர்பராஸ் நீக்கபட்டுள்ளார். என்னதான் நடக்கிறது? கேள்வி கேட்பார் இல்லையா? என்ற ஆவேசம் நிறைந்த கேள்விகள் சீரிய கிரிக்கெட் வட்டாரங்களில் எழுந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT