Published : 09 Sep 2025 07:10 AM
Last Updated : 09 Sep 2025 07:10 AM
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய அணிகள் உள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்று 20-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 28-ம் தேதி நடைபெறுகிறது. தொடரின் அனைத்து ஆட்டங்களும் துபாய், அபுதாபியில் நடத்தப்படுகிறது.
தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - ஹாங் காங் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 அணிக்கு அபுதாபியில் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (10-ம் தேதி) ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் துபாயில் நடைபெறுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.
டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதனால் உலகக் கோப்பை தொடருக்கான அணியை கட்டமைக்கும் வகையில் ஆசிய கோப்பை டி 20 தொடரை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 7 தொடர்கள் 50 ஓவர்கள் வடிவில் நடத்தப்பட்டவை. அதேவேளையில் 2016-ம் ஆண்டு இந்தியா வென்ற தொடர் டி 20 வடிவில் நடத்தப்பட்டிருந்தது. கடைசியாக 2023-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வென்றிருந்தது.
டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பை உட்பட 20, டி 20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. இந்த ஆட்டங்களின் வாயிலாக உலகக் கோப்பை தொடருக்கான வலுவான குழுவை உருவாக்க இந்திய அணி முனைப்பு காட்டக்கூடும். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி 80 சதவிகித வெற்றிகளை குவித்துள்ளது. தற்போது அவருடன் துணை கேப்டனாக ஷுப்மன் கில்லும் இணைந்துள்ளார். இது அணியின் வலிமையை அதிகரிக்கக்கூடும்.
பாகிஸ்தான் அணி சல்மான் ஆகா தலைமையிலும், இலங்கை அணி சரித் அசலங்கா தலைமையிலும் களமிறங்குகின்றன. பாகிஸ்தான் அணியில் பாபர் அஸம், முகமது ரிஸ்வான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் என்பதில் பாகிஸ்தான் அணியில் உள்ள முகமது நவாஷ், அப்ரார் அகமது, சுபியான் முகீம் உள்ளிடோர் பலம் சேர்க்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஷ் ரவூப், ஹசன் அலி ஆகியோரை நம்பி களமிறங்குகிறது பாகிஸ்தான் அணி.
சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியும் வலுவாகவே திகழ்கிறது. ஆனால் தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வென்று தொடரை வெல்லக்கூடிய அளவிலான நிலைத்தன்மை அவர்களிடம் உள்ளதா என்பது சந்தேகம்தான். அதேபோன்று வங்கதேச அணியும் தொடர் முழுவதும் சவாலைத் தாங்கும் அளவுக்கு போதுமான பலம் கொண்டதாக அமையவில்லை.
‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி சவால்தரக்கூடும். ரஷித் கான், நூர் அகமது ஆகியோருடன் கசன்ஃபரும் சுழலில் பலம் சேர்க்கக்கூடியவராக திகழ்கிறார். ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங் காங் ஆகிய அணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த அணிகளுடன் விளையாட உள்ளது புதிய அனுபவத்தை தரக்கூடும்.ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு அணிகளிலும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தலா 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT