Published : 08 Sep 2025 01:12 PM
Last Updated : 08 Sep 2025 01:12 PM

வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம்.

பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியிருக்கிறது? எப்படி உணர்கிறோம் என்று யாரும் எங்களிடம் நேரடியாகக் கேட்பது கூட கிடையாது. ஆனால் நான் என் உடல்தகுதியை சுயமாகவே பரமாரிக்கிறேன்.

விளையாடுவதற்குத்தானே எல்லாம். விளையாடாமல் ஆட்டத்திலிருந்து விலகுவதற்காகவா இருக்கிறோம்? ஆனால் சிலபல இடைவெளிகளும் ஓய்வுகளும் அவ்வப்போது அவசியமாகிறது. ஏனெனில் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பணிச்சுமை பற்றியெல்லாம் பேச முடியாது. அங்கு ஆட்டச்சூழ்நிலையில் நாம் மூழ்கி விடுவோம்.

ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் ஆட்டத்திற்கு இடையே ஓய்வு முக்கியம். அந்த ஓய்வில்தான் உடல்நிலையைப் பாதுகாக்க முடியும், பரமாரிக்க முடியும். ஆட்டத்தில் நமக்கு பெரிய ரோல் இல்லை என்றால் வலையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் ஆட்டத்தில் முழுச்சுமையும் உங்கள் மேல் இருக்கும் போது வலையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

அவர் இப்படிக் கூறக் காரணம், பும்ராக்களையும் ஷமிக்களையும் யோசிக்கும் நிர்வாகம், சலுகை அளிக்கும் நிர்வாகம் ஷர்துல் தாக்கூர்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர் கடந்த 11 மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் இரானி கோப்பையில் தொடங்கிய சீசன் அவருக்கு 2024-25 ரஞ்சி சீசன், விஜய் ஹஜாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, முதலில் விற்கப்படாமல் போனாலும் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆட நேரிட்டது, பிறகு இந்தியா ஏ தொடர் என்று வரிசையாக அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிவருகிறார். எனவே பணிச்சுமை விவகாரம் சில எலைட் வீரர்களுக்கு ஒருதலைப்பட்சமாகச் சாதகமளிக்கும் வேளையில் ஷர்துல் தாக்கூர் போன்ற விளிம்பில் இருக்கும் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x