Published : 06 Sep 2025 06:30 AM
Last Updated : 06 Sep 2025 06:30 AM
சென்னை: ஐயன்மேன் 5150 டிரையத்லான் போட்டியின் அறிமுக விழா சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘ஐயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை’ போட்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த டிரையத்லான் போட்டி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் பீச் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. டிரையத்லான் போட்டியானது 1.5 கிலோ மீட்டர் நீச்சல், 40 கிலோ மீட்டர் சைக்கிளிங், 10 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.3 கோடியை ஒதுக்கியுள்ளது.
ஐயன்மேன் அமைப்புடன் இணைந்து இந்த போட்டியை எஸ்டிஏடி நடத்துகிறது. ஆசிய அளவில் ஐயன்மேன் டிரையத்லான் போட்டியை நடத்தும் 3-வது நாடு இந்தியா ஆகும். அதேவேளையில் உலகளவில் 6-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியுடன் ஸ்பிரின்ட் டூயத்லான், ஒலிம்பிக் டூயத்லான் போட்டிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில்
டூயத்லான் போட்டி அறிமுகமாவது இதுவே முதன்முறையாகும். டூயத்லானில் நீச்சல் பிரிவு மட்டும் கிடையாது. அதற்கு பதிலாக இரு முறை ஓட்டம் இருக்கும். ஸ்பிரின்ட் டூயத்லான் 5 கிலோ மீட்டர் ஓட்டம், 20 கிலோ மீட்டர் சைக்கிளிங், 2.5 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒலிம்பிக் டூயத்லான் 10 கிலோ மீட்டர் ஓட்டம், 40 கிலோ மீட்டர் சைக்கிளிங், 5 கிலோ மீட்டர் ஓட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
6 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளும் வகையில் ‘ஐயன்கிட்ஸ் சென்னை ரேஸ்’ போட்டியும் நடத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகளில் பங்கேற்பதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக போட்டியை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஐயன்மேன் 5150 டிரையத்லான் அமைப்பினருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, ஐயன்மேன் இந்தியாவின் தலைவர் தீபக் ராஜ், போட்டியின் துணை நடுவர் ஆர்த்தி சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT