Published : 01 Sep 2025 06:18 AM
Last Updated : 01 Sep 2025 06:18 AM
புதுடெல்லி: ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 50 தங்கம் உட்பட 99 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.
16-வது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வந்தது. இந்தப் போட்டியின் கடைசி நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்துள்ளது. 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். கஜகஸ்தான் அணி, 21 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்று 2-வது இடத்தை பெற்றது.
செப்டம்பர் 11 முதல் மாவட்ட வாலிபால் போட்டி: சென்னையில் செப்டம்பர் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னை மாவட்ட பி டிவிஷன் ஆடவர் வாலிபால் போட்டியும், மாவட்ட மகளிர் வாலிபால் போட்டியும் நடைபெறவுள்ளது. சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் இந்தப் போட்டிகளை சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடத்தவுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் இ-மெயிலில் தொடர்புகொண்டு பெயரைப் பதிவு செய்யலாம்.
திருவள்ளூர் பிரீமியர் லீக்: இந்தியன் வங்கி சாம்பியன்: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில் இந்தியன் வங்கி 4 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ். எம். நாசர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ பரந்தாமன், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி. பாஸ்கரன், ஹாக்கி திருவள்ளூர் தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை, முன்னாள் ஹாக்கி வீரர்கள் முகமது ரியாஸ், திருமாவளவன், இந்திய பயிற்சியாளர் சி. ஆர். குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT