Published : 30 Aug 2025 05:03 PM
Last Updated : 30 Aug 2025 05:03 PM

புஜாராவை அன்று ‘ஏமாற்றுக்காரர்...’ என திட்டிய கர்நாடக ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

2018-19 கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு கொடி நாட்டி விட்டு வந்த இந்திய அணியில் புஜாரா மெல்போர்ன், அடிலெய்ட், சிட்னி மைதானங்களில் 3 சதங்களை அடித்து துணைக்கண்டத்துக்கே பெருமை சேர்த்த பேட்டர் ஆனார். ஏனெனில், துணைக் கண்ட அணிகள் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றதில்லை. அந்த முறை இந்திய அணி சாதித்தது புஜாராவினால் என்பதை யாரும் மறக்க முடியாது.

ஆனால், தேசத்துக்குப் பெருமை என்பது மட்டுமல்ல துணைக் கண்டத்துக்கே பெருமை சேர்த்த புஜாராவை கர்நாடக ரசிகர்கள் ஒருமுறை ‘ஏமாற்றுக்காரா’ என்ற தொனியில் ‘cheater.. cheater...’ என்று கத்தியது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கலாம். ஒருபுறம் தேசத்தின் பெருமை என்று ரசிகர்கள் தேசப்பற்றைக் காட்ட, இன்னொரு புறம் பிராந்திய அணி மீதான வெறி காரணமாக புஜாராவை ஏமாற்றுக்காரர் என்று ஸ்டேடியத்திலேயே கத்தியது இந்திய ரசிகர்களின் முரண்படுபிளவுண்ட மனநிலையை (split mind) காட்டுவதாகவும் கொள்ளலாம் அல்லது அமெரிக்கக் கவி வால்ட் விட்மன்,

‘Do I contradict myself?
Very well then I contradict myself,
I am large, I contain multitudes’ என்று கூறியது போல் இந்திய ரசிகர்களின் பன்முகத்தன்மையை எடுத்து விளம்புவதாகவும் கொள்ளலாம்.

ஏன் புஜாரா ‘ஏமாற்றுக்காரர்’ ஆனார்? அது ஒரு ரஞ்சி டிராபி அரையிறுதிப் போட்டியாகும். 2019 ஜனவரி 24-28 தேதிகளில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதியில் சவுராஷ்ட்ரா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கர்நாடகாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

4-வது இன்னிங்சில் சவுராஷ்ட்ராவின் வெற்றி இலக்கு 279 ரன்கள். வினய் குமார், மிதுன் ஆகியோரது வேகத்தில் சவுராஷ்ட்ரா முதல் 3 விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்தது. ஆனால், அதன் பிறகு புஜாரா ஒரு இன்னிங்ஸை ஆடினார். அது அற்புதமான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ். 266 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 131 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து இலக்கை எட்டி சவுராஷ்டிராவை இறுதிக்குள் இட்டுச் சென்றார். இவருடன் சதமடித்த இன்னொரு வீரர் ஷெல்டன் ஜாக்சன். 279/5 என்று வெற்றி பெற்றது சவுராஷ்ட்ரா.

இந்த டெஸ்ட்டில் அவர் இருமுறை நடுவரால் காப்பாற்றப்பட்டார். அல்லது கர்நாடக ரசிகர்களின் பார்வையில் நடுவர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார். இருமுறை புஜாரா பந்தை எட்ஜ் செய்து கேட்ச் ஆனார். ஆனால், இருமுறையும் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. புஜாராவும் தானாகவே அவுட் என்று வெளியேறவில்லை.

இதுதான் கர்நாடக ரசிகர்களின் பெரும்கோபத்துக்குக் காரணமாக புஜாராவை அந்த இன்னிங்ஸ் முழுதும் ரசிகர்கள் ‘cheater... cheater...’ என்று கூச்சலிட்டு அவரை அவமானப்படுத்தினர். ஆஸ்திரேலியா தொடரில் ஹீரோ, ஆனால் அதே சமயத்தில் கர்நாடாக ரசிகர்கள் பார்வையில் வில்லன்.

ஒரு விதத்தில் பார்த்தால் அந்த ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன் ஜாஷ் ஹேசில்வுட் கூறியதை நினைவுகூர்ந்தால் புஜாரா ஆஸ்திரேலியாவின் வில்லனும்தான். ஆனால், டார்லிங் ஆஃப் இந்தியா, சவுராஷ்ட்ரா என்பதையும் நாம் சேர்த்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x