Published : 29 Aug 2025 08:05 AM
Last Updated : 29 Aug 2025 08:05 AM

புரோ கபடி லீக் சீசன் 12 இன்று தொடக்கம்: வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் தமிழ் தலைவாஸ்

புரோ கபடி சீசன் 12-க்கான கோப்பை அறிமுக விழாவில் பங்கேற்ற 12 அணிகளின் கேப்டன்கள்.

விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக்கின் 12-வது சீசன் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டரங்கில் இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. ஜெய்ப்பூர், சென்னை, டெல்லி ஆகிய 4 நகரங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன. 12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் லீக்சுற்றில் மட்டும் மொத்தம் 108 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 18 லீக் ஆட்டங்களில் விளையாடுகின்றன.

தொடக்க நாளான இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதைத் தொடர்ந்து நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - புனேரி பல்தான் அணிகள் மோதுகின்ன. இம்முறை தமிழ் தலைவாஸ் அணி நட்சத்திர ரெய்டரான பவன் ஷெராவத் தலைமையில் களமிறங்குகிறது. மேலும் துணை கேப்டனாக முன்னணி ரைடர் அர்ஜூன் தேஷ்வால் உள்ளார். இவர்கள் பல்வேறு அணிகளில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளனர்.

மேலும் புதிய பயிற்சியாளரான சஞ்சீவ் பால்யன், கடந்தசீசன்களில் ஜெய்ப்பூர் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதனால் இவர்களது கூட்டணி அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். பவன் ஷெராவத் கூறும்போது, “தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சீசனை தொடங்குவது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. ரசிகர்கள் எங்கள் பின்னால் வலுவாக இருப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இது எங்களை இன்னும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இதுபோன்ற போட்டிகள் சீசனுக்கான தொனியை அமைக்கின்றன, மேலும் ரசிகர்களுக்கு சிறந்த போட்டியை வழங்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார். புரோ கபடி லீக் சீசன் 12 போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல், ஜியோஹாட்ஸ்டாரில் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x