Published : 27 Aug 2025 02:24 PM
Last Updated : 27 Aug 2025 02:24 PM

''தமிழ்நாடு அணிக்காக ஆடப்போவதில்லை'' - ஷாக் கொடுத்த விஜய் சங்கர்!

இப்போதுதான் புச்சிபாபு தொடரில் தமிழ்நாடு லெவன் அணிக்கு ஆடினார் விஜய் சங்கர். இந்த சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் அணியிலிருந்து பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாடு அணியுடனான அவரது 13 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது. விஜய் சங்கர், திரிபுரா அணிக்கு விளையாடப் போகிறார். 2011-12ல் தமிழ்நாடு அணியில் அறிமுகமானார். இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவருக்கு ஆட்சேபனையின்மை (என்.ஓ.சி) சான்றிதழ் அளித்துள்ளது. எனவே திரிபுராவுக்கு விளையாடச் செல்கிறார் விஜய் சங்கர்.

புச்சி பாபு தொடரின் 2-வது சுற்றில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் அமர வைக்கப்பட்டதனால் இந்த முடிவை தன் 34-வது வயதில் எடுத்துள்ளார். கடந்த ஆண்டும் விஜய் சங்கர், 2 ரஞ்சி போட்டிகளில் ஆடவில்லை. சையத் முஷ்டாக் அலி தொடரின் சில போட்டிகளிலும் விஜய் சங்கர் ஆடவில்லை.

அந்த சீசனிலேயே விஜய் சங்கர் நன்றாக ஆடிவந்த போதிலும் உட்கார வைப்பது குறித்து தன் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது கவனிக்கத்தக்கது. இதனையடுத்து பொறுத்தது போதும் கிளம்பி விடலாம் என்று அவர் புதிய சவாலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

2024-25 ரஞ்சி சீசனில் விஜய் சங்கர் 476 ரன்களை 52.88 என்ற சராசரியில் எடுத்து அசத்தினார். இதில் சத்தீஸ்கர் மற்றும் சண்டிகருக்கு எதிராக இரண்டு முக்கியமான சதங்களையும் அடித்தார்.

இதே போல் கடந்த ஆண்டு மற்றொரு நட்சத்திர தமிழ்நாடு வீரர் பாபா அபராஜித் கேரளாவுக்குச் சென்று விட்டார். இப்போது விஜய் சங்கர். இவர் 70 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ளார். 3,702 ரன்களை 45.14 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 11 சதங்கள், 43 விக்கெட்டுகளும் இவரது கரியரில் அடங்கும்.

2014-15 சீசனில் தமிழக அணியின் மிடில் ஆர்டர் நங்கூரமாகத் திகழ்ந்தார் விஜய் சங்கர். இதனையடுத்து அவர் இந்தியா-ஏ அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார். 2016-17 உள்நாட்டு ஒருநாள் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபிகளில் தமிழக அணியை தன் கேப்டன்சியில் கோப்பையை வெல்ல இட்டுச் சென்றார். தெற்கு மண்டல அணியை வழிநடத்தி 2021-22 சீசனில் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றார்.

விஜய் சங்கர் பங்களிப்பைப் பாராட்டிய தமிழ்நாடு அணியின் தலைமைப் பயிற்சியாளரான முன்னாள் வீரர் செந்தில்நாதன், இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அரங்கில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. இப்போது இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x