Last Updated : 24 Aug, 2025 12:10 PM

 

Published : 24 Aug 2025 12:10 PM
Last Updated : 24 Aug 2025 12:10 PM

ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா

சென்னை: அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

37 வயதான புஜாரா இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். கடைசியாக கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7195 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 43.61. மொத்தம் 16,217 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2010-ல் இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார்.

தடுப்புமுறை ஆட்டத்திற்கு பெயர் போனவர். இக்கட்டான சூழலில் அணியின் மீட்பராக செயல்பட்டு விளையாடும் திறன் படைத்தவர். களத்தில் எதிரணி பவுலர்கள் சிறப்பாக வீசும் பந்தை அறிந்து அதை ஆடாமல் அப்படியே லீவ் செய்யும் கலையில் கைதேர்ந்தவர்.

இந்திய அணிக்காக (ஆல்-டைம்) டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் 8-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,074 ரன்களை சேர்த்துள்ளார். 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்கள் இதில் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 49.38. இந்திய அணிக்காக 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களை கடந்துள்ளார்.

இந்த சூழலில் சுமார் இரண்டு ஆண்டு காலமாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் இந்த நிலை தொடர்ந்தது. இதே நிலை ரஹானேவும் எதிர்கொண்டு வருகிறார். அண்மையில் முடிந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கோலி மற்றும் ரோஹித் சர்மா என இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த சூழலில் புஜாராவும் இப்போது ஓய்வு அறிவித்துள்ளார்.

“இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு, தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு முறை ஆட்டக்களத்தில் களம்காணும் போது என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயல்வேன். இந்த உணர்வை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அனைத்து நல்ல விஷயத்துக்கும் ஒரு முடிவு உண்டு என எல்லோரும் சொல்வதுண்டு. அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். இதை மிகுந்த நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேங்க் யூ” என தனது சமூக வலைதள பதிவில் புஜாரா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x